எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், இதில், விண்ணப்பித்த தமிழகத்தைச் சாராத 22 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோன்று, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேருக்குத் தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரம் முதல் நடைபெற்று வரும் நிலையில், தரவரிசைப் பட்டியலில் 218 வெளிமாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், அவர்கள் இரு மாநிலங்களில் விண்ணப்பித்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, போலியாக இருப்பிடச் சான்று பெற்று இரு மாநிலங்களில் விண்ணப்பித்தவர்களைக் கண்டறியவும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அதில், 22 மாணவர்களின் பூர்விகச் சான்றில் குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது பெயர்கள் தமிழக தரவரிசைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ கூறியதாவது:-
மருத்துவக் கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகளின் இருப்பிடச் சான்று, ஜாதி சான்று உள்பட பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதில் எவரேனும், வேறு மாநிலத்திலும் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தால் அவருடைய பெயர் தமிழக தரவரிசைப் பட்டியலிலிருந்து உடனடியாக நீக்கப்படும். அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் வெளிமாநிலத்தவர் எவரும் பயனடையாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












