பிளஸ்-2 பொதுத்தேர்வை சிறையிலிருந்தபடி எழுதிய 15 கைதிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி பெற்ற சிறைக் கைதிகளுக்கு அதிகாரிகளும், சக கைதிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்தன. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ம்தேதி முதல் 13-ம் தேதி வரை நடந்தது. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தப் பணிகள், 83 மையங்களில், 30,000-த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வாயிலாக சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டன.
அதைத் தொடர்ந்து விடைத்தாள் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும், மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்புப் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை, தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில், மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மதுரை மத்திய சிறையில் 12-ம் வகுப்பு தேர்வெழுதிய 15 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்த சிறையில் 8-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை கைதிகள் கல்வி பயில்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது அவர்களுக்கு தேவையான சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான சிறைவாசிகள் சிறையில் இருந்தபடியே பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறையும், சிறை நிர்வாகமும் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மதுரை மத்திய சிறையில் உள்ள 15 தண்டனை கைதிகள் எழுதினர். இன்று தேர்வு முடிவுகள் வந்தநிலையில் 15 பேரும் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் சிறைவாசி ஆரோக்கிய ஜெயபிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், அலெக்ஸ் பாண்டியன் என்ற கைதி 532 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண்குமார் என்ற சிறைக்கைதி 506 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
கைதிகள் 15 பேரும் தேர்ச்சி பெற்ற நிலையில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்ததை முன்னிட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறைத் துறை அதிகாரிகளும், சக கைதிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












