மழலையர் பள்ளி அங்கீகார விவகாரம்: ஜூலை 22-க்குள் விதிமுறைகளை வெளியிட கோர்ட் உத்தரவு!

Posted By:

சென்னை: மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை ஜூலை 22-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் பல இடங்களில் மழலையர் பள்ளிகள் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. மேலும் அவை குழந்தைகளின் பெற்றோரிடம் அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து வருகின்றன. இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்ற பெற்றோரின் புலம்பல் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன் காதில் விழுந்துவிட்டது போலும்.

மழலையர் பள்ளி அங்கீகார விவகாரம்: ஜூலை 22-க்குள் விதிமுறைகளை வெளியிட கோர்ட் உத்தரவு!

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்படுகின்றன. ஆனால், அந்தப் பள்ளிகள் பெற்றோரிடம் அதிகமான கல்விக் கட்டணத்தை வசூலிக்கின்றன. முறையான அங்கீகாரம் பெறாமல் செயல்படும் இந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனறு நீதிமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மழலையர் பள்ளிகள் தொடர்பான விவரங்களை பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிட 2 வார கால அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், விதிமுறைகளை உருவாக்க மேலும் 6 வார கால அவகாசம் கேட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை, அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் அரசு உருவாக்க வேண்டும். அந்த நிபந்தனைகளை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாத நிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர், மழலையர் பள்ளிக்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அந்த வரைவு விதிமுறை பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தற்போது பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு விதிமுறைகள் தொடர்பான கருத்துகளை, மழலையர் பள்ளி நிர்வாகங்கள், பொதுமக்கள் வருகிற 22-ஆம் தேதிக்குள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் கருத்துக்களை பரிசீலனை செய்து, ஜூலை 22-ஆம் தேதிக்குள் மழலையர் பள்ளிகளுக்கான இறுதி விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கை ஜூலை 30-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

English summary
Madras Highcourt has ordered to The Tamilnadu government to make final rules and regulations for Kindergarden schools.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia