பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின் காரணமாகக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது சில ஆபாச இணைய விளம்பரங்கள் மற்றும் இதர இணைய தளங்களால் மாணவர்களின் கவனம் சிதைவதாகக் கூறி ஆன்லைன் வகுப்புக்களுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், தமிழகத்தில் 8 சதவிகித வீடுகளில் மட்டுமே இணைய இணைப்புடன் கணினிகள் உள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்ப்புற - கிராமப்புற மற்றும் ஏழை - பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவானது, நீதிபதிகள் வினீத்கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா? தேவையற்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்த திட்டம் உள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், மாநில அரசு பிரத்தியேக கல்வி சேனல் வைத்துள்ளதாகக் கூறினார். இதையடுத்து, கொரோனா காரணமாக அனைத்துமே ஆன் லைன் முறையில் உள்ளது எனவும், தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆன்-லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதேனும், நிரந்தர திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.