தமிழகத்தில் தற்போது 2,381 அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் இத்திட்டத்தினை மேலும் கூடுதலாக 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஏழை பெற்றோரின் குழந்தைகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இதில், 3 முதல் 4 வயது குழந்தைகளை எல்கேஜி வகுப்பிலும், 4 முதல் 5 வயது குழந்தைகளை யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளியிலேயே எல்கேஜி, யுகேஜி படிக்கும் திட்டமானது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெற்றோர் பலரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை இதில் சேர்த்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில் இதுவரை 51 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டு விட்டனர்.
மேலும், வரும் செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பெற்றோர்களின் வரவேற்பைப் தொடர்ந்து இந்தத் திட்டத்தை அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்படும் இதர 3 ஆயிரம் அங்கன்வாடிகளிலும் படிப்படியாக மழலையர் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












