மம்மீஸ்.. டாடீஸ்.. பிள்ளைங்களை கொஞ்சம் ப்ரீயா விடுங்களேன்!

Posted By:

சென்னை : குழந்தைப்பருவம் என்பது ஓடிஆடி விளையாடும் குதுகலமான பருவம். கோடை விடுமுறையிலாவது குழந்தைகள் முழுக் குதுகலத்தை அனுபவிக்க பெற்றோர்கள் வழி செய்ய வேண்டும்.

பள்ளி விடுமுறை என்றால் ஒரு காலத்தில் புத்தகங்களை தூக்கி தூர வைத்துவிட்டு விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருந்தோம்.

முன்பெல்லாம் கோடைவிடுமுறையில் உறவினர் வீடுகளுக்குச் சென்று உறவை வளர்ப்போம். கிராமத்தில் உள்ள பாட்டி தாத்த வீட்டிற்குச் சென்று இயற்கையை ரசிப்போம். ஆறு குளம் என சென்று குளித்து சந்தோசமாக பொழுதைக் கழிப்போம். இதனால் குழந்தைகளுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதனால் குழந்தைகள் பள்ளி தொடங்கும் முதல் நாளில் பள்ளிக்கு சென்று தன் நண்பர்களுடன் சந்தோசமாக தன் லீவு நாட்களை கழித்தைக் குறித்து பேசி மகிழ்வார்கள். மேலும் அவர்கள் தெளிவான எண்ணங்கள் மற்றும் புது சிந்தனைகளோடு பாடங்களை உற்சாகமாக புது வகுப்பில் படிக்க துவங்குவர். மன மகழ்ச்சியாக முதல் நாள் வகுப்பைத் தொடங்குவது புது உற்சாகத்தைத் தரும்.

ஆனால் இப்போதெல்லாம் பெற்றோர்கள் லீவு நாட்களில் அடுத்த வருடத்திற்கான பாடங்களைப் படிக்க வைக்கிறார்கள். பல சம்மர் வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள். இதனால் மாணவர்கள் கோடைவிடுமுறையை முழு சந்தோசத்துடன் கழிக்க முடியவில்லை.

படிப்பில் சலிப்பு

பள்ளி நாட்களில் மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வருகிறார்கள். பின்பு டியூசன் வகுப்பிற்குச் சென்று விடுகிறார்கள். இதனால் எப்போதும் படிப்பை மட்டுமே பெற்றோர்கள் மையப்படுத்துவதால் மாணவர்களிடையே ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. படிப்பு முக்கியம் தான் அதே வேளையில் நல்லொழுக்கம், விளையாட்டு போன்றவற்றையும் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பிள்ளைகளின் விருப்பம்

பிள்ளைகள் நல்ல மார்க் வாங்க வேண்டும், அதற்கு எத்தனை டியூசன் கிளாஸ் வேணும்னாலும வைப்பேன் என்று சொல்கின்ற பெற்றோர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். டியூசன் வகுப்பிற்குச் செல்வது நல்லதுதான். ஆனால் தங்கள் பிள்ளைகளின் திறமை, தகுதி, ஆசை ஆகியவற்றை அறிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ப பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

லீவு நாட்கள்

தங்களுடைய சுய விருப்பத்தைப் பெற்றோர்கள் பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. பிள்ளைகள் எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. எப்படி படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். லீவு நாட்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை புத்தக கண்காட்சி, நூலகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லாம். மேலும் சுற்றுலா அழைத்துச் செல்லலாம். அவ்வாறு வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அது அவர்கள் ஆர்வத்தை வெகுவாக இழுக்கும். மேலும் வெளியிடங்களுக்குச் செல்லும் போது கவனமுடன் செல்வதும் முக்கியம்.

திறமை

ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொருத் திறமைக் கட்டாயம் இருக்கும். எல்லோரையும் மதிப்பெண் பெற வைப்பது முக்கியமல்ல. நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவது என்பது எல்லோரும் செய்யும் விஷயம்தான். நுாறு மதிப்பெண் மாணவர்தான் சிறந்த மாணவர் என்று உளவியல் அறிஞர்கள் கூறுவதில்லை. அவனை முழுமையான மாணவன் என்றும் சொல்ல முடியாது.

பெற்றோர்கள் நேரம் ஒதுக்க வேண்டும்

லீவு நாட்களில் மாணவர்கள் சந்தோசமாக விளையாட வேண்டும். உறவினர் வீடுகளுக்குச் சென்று உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். லீவு நாட்களை மாணவர்கள் தங்கள் விருப்பப்படி சந்தோசமாக பாதுகாப்பாக கழிக்க பெற்றோர்கள் அவர்களுடன் இருந்து உதவ வேண்டும். வீட்டில் உள்ள சிறுசிறு வேலைகளை செய்வது குறித்து அவர்களுக்குப் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் அதிக நேரத்தை குழந்தைகளுடன் செலவிட வேண்டும்.

தன்னம்பிக்கையுள்ள மாணவர்கள்

தன்னம்பிக்கை, தன்மானம், என்னால் முடியும் என்ற சிந்தனை, நற்பண்புகளுடன் படிப்பும் சேர்ந்தால்தான் சிறந்த மாணவரை உருவாக்க முடியும். ஒழுங்கில்லாமல், குணமில்லாமல், நெறியில்லாமல் படிப்பிற்கு மட்டும் முக்கியத்துவம் தருவதால் அதற்கு மதிப்பில்லை.ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகங்களும் சமூக சிந்தனையுள்ள, தன்னம்பிக்கையுள்ள மாணவர்களை உருவாக்குவதுதான் முக்கியம். அதை நோக்கி, வரும் கல்வி ஆண்டில் செயல்பட வேண்டும்.

English summary
Summer vacation (also called summer holiday or summer break) is a school holiday in summer between school years and the longest break in the school year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia