ரயில்வே வைஃபையால் சிவில் தேர்வில் வென்ற கூலி!

Posted By: Kani

தெரு விளக்கில் படித்து சாதித்தவர்கள் வரலாறு தெரியும்... ரயில்வே இலவச வை-பை உதவியால் சிவில் தேர்வில் வெற்றி பெற்ற கூலித் தொழிலாளியை தெரியுமா? ஆம், ரயில்வே ஸ்டேசனில் உள்ள இலவச வை-பையின் உதவியால், சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் கேரளா அரசின் சிவில் தேர்வில் வெற்றியடைந்துள்ளார்.

சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தவர்தான் ஸ்ரீநாத், இன்னும் சில வாரங்களில் அதிகாரி. தேடல் எப்போதும் வெற்றியை பரிசளிக்க மறுப்பதில்லை. அதற்கான சரியான உதரணம்தான் ஸ்ரீநாத்.

இந்தியா முழுவதும் கடந்த 2016 ஆண்டு ரயில் நிலையங்களில் இலவச வை-பை சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.இதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட ஸ்ரீநாத் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து ஸ்ரீநாத் கூறுகையில்,

முதன் முதலாக வை-பை பயன்படுத்தும் போது இந்த வசதியை ஏன் நாம் முழுமாயாக பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது. வேலையில் எப்போதும் சுமைகளுடனே பயணிக்க வேண்டும் என்பதால், மொபைலில் இயர்போன் மூலமாக தேர்வுக்கான பாடங்களை கேட்க ஆரம்பித்தேன்.

கேள்விகளை முழுவதுமாக உள்வாங்கி கொண்டு பின்பு இரவு நேரங்களில் இதற்கான விடைகளை படித்து பார்த்து கொள்வேன். இந்த தொடர் முயற்சிதான், கேரளா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளது.

இன்னும் படிப்பதை நிறுத்தவில்லை, ஏன்னென்றால் குடும்ப கஷ்டம் இன்னும் தீரவில்லை. லட்சியத்தை அடையும் ஒரு வேலையில் அமரும் வரை என் படிப்பு தொடரும் என்கிறார் புன்னகையுடன். மிக விரைவில், ஸ்ரீநாத் நில வருவாய் துறையில் உதவியாளராக பணியமர உள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் ரயில்வே துறையில் 62 ஆயிரம் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.

தெருவிளக்கில் படித்து சாதித்தவர்கள் வரலாறு தெரியும்... ஆனால் ரயில்வே இலவச வை-பை உதவியால் சிவில் தேர்வில் ஜெயித்த முதல் கூலித் தொழிலாளி இவராகத்தான் இருக்க வேண்டும்.  

English summary
Kerala Coolie A Step Closer To Civil Services Dream, Used Railway WiFi To Prep

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia