5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைமுறை, வினாத்தாள் தயாரிப்பு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவம்பர் 27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
"தனியார் பள்ளிகளில் டிசம்பர் மாதம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால், அதே நாளில் அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடத்த தயாராக உள்ளோம். சமீபத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இவ்வாறு மாணவர்கள் சேர்க்கையை எப்போது வேண்டுமானாலும் நடைபெறும் வகையில் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்று நான் கூறவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும்.
அந்த பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் தயாரித்து அனுப்பப்படும். இந்த பொதுத்தேர்வினால் மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்துவது இருக்காது.
மாணவர்கள், பெற்றோர்கள் இந்த பொதுத்தேர்வு குறித்து பீதியடைய வேண்டாம். மேலும், இத்தேர்விற்காக வேறு பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது. தேர்வுகள் அனைத்தும் ஆசிரியர்கள் மூலம் அந்தந்த பள்ளிகளிலே தான் நடத்தப்படும்'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












