அரசுப் பள்ளி மாணவர்களும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராக பயிற்சி

Posted By:

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு வசதியாக பயிற்சியை மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு அளிக்கவுள்ளது. ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் சேர உதவும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.), அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.எம்.டி.) ஆகிய தேர்வுகளுக்குத் தயாராக அரசு பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

கேஇஇ நுழைவுத் தேர்வு

ஜே.இ.இ., ஏ.ஐ.பி.எம்.டி. உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் விதத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

இதற்காக ஒவ்வொரு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியளவில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வட்டார அளவில் பயிற்சி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

10 ஆயிரம் பேர்

குறைந்தபட்சம் 10 ஆயிரம் மாணவர்களை இதில் சேர்த்து பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டான்எக்ஸெல் திட்டம்

இந்தத் திட்டத்துக்கு - சிறந்து விளங்கும் தமிழகம் - என்பதைக் குறிக்கும் வகையில் டான்எக்ஸெல் (TANEXCEL) என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறைந்த அளவில் தேர்ச்சி

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் மிகக் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெறுவதாக பரவலாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்தத் தேர்வை எழுதும் மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோர் வெற்றி பெறுவதில்லை. அவர்களையும் இந்தத் தேர்வில் வெற்றி பெறச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

ரூ.2.50 கோடியில் திட்டம்

இதைப் போக்கும் வகையில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம், தமிழக அரசு ஆகியவை இணைந்து ரூ.2.50 கோடியில் இந்த நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்யும் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்க உள்ளன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

 

பிளஸ் 1, 2-வுக்கும் விரிவுபடுத்தப்படும்

அடுத்து வரும் ஆண்டுகளில் இது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.

விரிவுரையாளர்கள்

வாரத்தில் 2 நாள்களில் பள்ளி வேலை நேரம் தவிர்த்து மீதமுள்ள நேரத்தில் இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சிக்கான பாடத் திட்டம், குறிப்புகள் போன்றவை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், அரசுப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளின் மூத்த விரிவுரையாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு உருவாக்கப்பட உள்ளன.

10 ஆண்டு வினாத்தாள்கள்

கடந்த 10 ஆண்டுகளில் உள்ள ஐஐடி நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குறிப்புகள் உருவாக்கப்படும்.

கையேடுகள்

இந்தக் குறிப்புகளைக் கையேடாக அச்சடித்து வழங்கும் திட்டம் உள்ளது. பெரும்பாலும் இந்த ஆண்டு அந்தக் குறிப்புகள் நகல்கள் எடுக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஒவ்வொரு வட்டார அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் பேராசிரியர்களின் வகுப்புகளை எஜுசாட் மூலம் திரையிடலாமா அல்லது அவர்களின் உரைகளை மாணவர்களுக்கு சி.டி.க்களாக வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

 

ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

இவற்றில் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கமளிப்பர். இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி எப்போது?

மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை எப்போது வழங்குவது, வகுப்புகளை எவ்வாறு நடத்துவது உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் இறுதி செய்யப்பட்டுவிடும். அக்டோபர் இறுதியிலிருந்து இந்தப் பயிற்சி தொடங்கப்படும்.

English summary
Union Government and Tamilnadu Government will jointly give JEE entrance exam coaching for 10,000 Govt school students from this academic year.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia