விரைவில் அரசு மருத்துவமனைகளில் குழந்தையின்மை சிகிச்சைக்கான சிறப்பு படிப்பு

Posted By:

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தையின்மை சிகிச்சை குறித்த ஓராண்டு ஃபெலோஷிப் படிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.

சென்னை ஆகாஷ் மருத்துவ மையத்துடன் இணைந்து இந்தப் படிப்பை தமிழக அரசு வழங்கவுள்ளது என்றார் அவர்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

விரைவில் அரசு மருத்துவமனைகளில் குழந்தையின்மை சிகிச்சைக்கான சிறப்பு படிப்பு

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் இப்போது குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. குழந்தை இல்லாதோரில், 70 சதவீதம் பேர் இயல்பான சிகிச்சை முறைகளைப் பெறுவதன் மூலம் குழந்தைப் பேறு அடைய முடிகிறது. மீதமுள்ள 30 சதவீதம் பேர்தான் குழந்தைப் பேறு அடைவதில் சிரமம் உள்ளது. அத்தகைய 30 சதவீதம் பேருக்கும் நவீன குழந்தையின்மை சிகிச்சை முறைகள் மூலம் குழந்தைப் பேறை அளிக்கக்கூ டிய அளவுக்கு மருத்துவ அறிவியலில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை இல்லாத பெண்களுக்கு உதவும் வகையில் நவீன மைக்ரோ அறுவைச் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

கருக் குழாயில் அடைப்பு இருந்தால், அதை அகற்றும் சிறப்பு சிகிச்சை மையமாக இந்த மையம் சிறப்பாக செயலாற்றுகிறது. இதனால் பல பெண்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த மையத்தை உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்துள்ளது. மேலும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளுக்கு இங்கு ஈட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் அரசு மகளிர்-மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் முதல் கட்டமாக குழந்தையின்மை சிகிச்சை குறித்த ஓராண்டு ஃபெலோஷிப் படிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

பிற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்தப் படிப்பு படிப்படியாகக் கொண்டு வரப்படும் என்றார் அவர்.

English summary
A course on infertility will soon be available in government medical colleges in collaboration with Aakash Fertility Centre, said director of Medical Education Dr S Geethalakshmi.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia