சிறப்புப் பயிற்சிக்காக இஸ்ரேல் செல்லும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்

Posted By:

சென்னை: இந்தியக் காவல் பணியைச் சேர்ந்த(ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் 75 பேர் முதல்முறையாக, தங்களது துறை சார்ந்த பல்வேறு சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 75 பேர், 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஆந்திர மாநிலம், ஹைதாராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவலர் அகாதெமியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

சிறப்புப் பயிற்சிக்காக இஸ்ரேல் செல்லும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், காவல் பணி ஆகியவற்றில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, தீவிரவாதத்தைத் திறம்பட எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து, ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இஸ்ரேல் காவல் துறை அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

மேலும், இஸ்ரேலிய எல்லைப் பகுதியில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை, அந்த நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் திறம்பட கையாள்வது குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் போலீஸாருக்கான துப்பாக்கி உள்ளிட்டவற்றை தயாரிக்கும் "சிபாத்' நிறுவனம் அமைத்துள்ள இடத்தையும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்தப் பயிற்சி இந்திய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என்றும், அந்த அனுபவங்கள் இந்தியாவில் பணியாற்றும்போத அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Indian Police Services officers have visited Israel for the first time as part of their training programme to learn techniques and best practices in counter-insurgency, managing low intensity warfare and use of technology in policing and countering terror.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia