உள்கட்டமைப்பு வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத 21 கல்லூரிகள்

Posted By:

சென்னை: உள்கட்டமைப்பு வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத நிலையில் 21 கல்லூரிகள் உள்ளது மாணவர்களையும், பெற்றோரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

ஏழை மாணவ மாணவிகள் உயர் கல்வி பெறும் நோக்கத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளை அரசு உருவாக்கி நடத்தி வருகிறது. இந்த நிலையிலும் மேலும் புதிய கல்லூரிகளையும் அரசு உருவாக்கி வருகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத 21 கல்லூரிகள்

தற்போது 76 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 37 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ளன.

தற்போதுள்ள நிலையில் 66 கல்லூரிகள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள 10 கல்லூரிகள் கடந்த 2 ஆண்டுகளி்ல் தொடங்கப்பட்டன. அவைகளுக்கு சொந்தக் கட்டடம் இல்லை. தற்காலிகமான கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இவற்றில் 60 சதவீதத்துக்கு மேல் முழு நேரப் பேராசிரியர்கள் உள்ளனர்.

ஆனால் உறுப்புக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 37 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 16 மட்டுமே அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள கல்லூரிகள் அனைத்தும் எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள், சுனாமி புனரமைப்பு மையங்களில் காலம்தள்ளி வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் வெங்கடாசலம் கூறியது:

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் 6 உறுப்புக் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் போதிய வசதிகள் இல்லாத தாற்காலிகக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 10 கல்லூரிகளில் 4 மட்டுமே சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன. 6 கல்லூரிகள் தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இரண்டு உறுப்புக் கல்லூரிகளும் தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 3 கல்லூரிகளில் ஒன்று தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 5 கல்லூரிகளில் ஒன்று தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் 4 கல்லூரிகளில் 2 தாற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதுமே உறுப்புக் கல்லூரிகள் இந்தநிலையில்தான் உள்ளன.

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதி மேம்படாததற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதததுதான் காரணம்.

அரசுக் கல்லூரிகளுக்கு முழு நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்படுகிறது. ஆனால், உறுப்புக் கல்லூரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிதி மட்டுமே அரசு சார்பில் ஒதுக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் முதலாமாண்டுக்கு ரூ. 700, இரண்டாம் ஆண்டுக்கு ரூ. 300, மூன்றாம் ஆண்டுக்கு ரூ. 300 என்ற அளவிலேயே கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், உறுப்புக் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 6,000 வரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் கல்விக் கட்டணம் மாறுபடுகிறது. இதனால் ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு முன்வந்து உறுப்புக் கல்லூரிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்றார் அவர்.

English summary
Tamilnadu Government college Teachers association has urged to create the Basis amenities and Infrastructure needed in arts and science colleges

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia