காரைக்காலில் அமையவிருந்த இந்திய கடல்சார் பல்கலை. வளாகத் திட்டம் ரத்து

Posted By:

சென்னை: காரைக்காலில் அமையவிருந்த இந்திய கடல்சார் பல்கலைக்கழகத் திட்டம் ரத்தாகியுள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்திய கடல்சார் பல்கலை.யின் காரைக்கால் வளாக திட்டம் தொடங்கப்பட்டது. இந்த காரைக்கால் வளாகம்தான் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, புதுச்சேரி அரசுக்கும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் கடலோர பகுதியாக உள்ளது. இதில் காரைக்காலும் அடங்கி உள்ளது. கப்பல் பணியில் ஈடுபட விரும்பும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசனால் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி இந்திய கடல்சார் பல்கலை.யின் (Indian maritime university) வளாகம் காரைக்காலில் தொடங்கப்பட்டது.

மத்திய பல்கலைக்கழகமான இதற்கு ஏற்கெனவே சென்னை, மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சி, கண்டலா ஆகிய நகரங்களில் பல்கலைக்கழக வளாகங்கள் உள்ளன. காரைக்காலில் தொடங்கப்பட்டது 7-வது வளாகம் ஆகும்.

காரைக்காலில் உள்ள தனியார் துறைமுக வளாகத்தில் உள்ள கட்டடத்தில் பல்கலைக்கழக வளாகம் செயல்படும் எனக் கூறப்பட்டது. மேலும், இதற்காக 10 ஏக்கர் நிலத்தை அக்கரைப்பேட்டையில் வழங்கவும் புதுவை அரசு ஒப்புக்கொண்டது.

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. வகுப்பறைகள், கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட எந்த வசதிகளுமே இல்லாமல் காரைக்காலில் கடல்சார் பல்கலை. வளாகம் தொடங்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் வளாகத்தை இயங்கச் செய்ய இந்திய கடல்சார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் அனுப்பப்பட்டார். இருப்பினும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

துறைமுகத்தில் இடம் ஒதுக்க தனியார் நிர்வாகம் ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பஜன்கோ வேளாண் கல்லூரி வளாகத்தில் இடம் தர மாநில அரசு பரிசீலித்தது. ஆனால், அங்கு ஏற்கெனவே காமராஜர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு மூலம் அனைத்து வளாகங்களுக்கும் (காரைக்கால் வளாகம் உள்பட) மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் (டிப்ளமோ இன் மரைன் என்ஜினீயரிங் மற்றும் நேவல் ஆர்க்கிடெக்டர்) வகுப்புகள் மட்டுமே காரைக்கால் வளாகத்தில் கற்பிக்கப்பட இருந்தது. ஆனால் இந்த படிப்புகளுக்கு புதுவை மாநில மாணவர்களிடமும் போதிய ஆர்வம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

புதுவையில் இருந்து ஒரு மாணவர் கூட காரைக்கால் வளாகத்தில் சேர விண்ணப்பிக்கவில்லை. கடல்சார் பல்கலைக்கழக நிர்வாகமும், காரைக்கால் வளாகத்தை தொடங்குவது குறித்து எந்த நிர்பந்தமும் தரவில்லை.

பட்டப்படிப்புக்குப் பதிலாக அதிக பொருள்செலவில் பட்டயப் படிப்பு படிப்பது குறித்து மாணவர்களிடம் ஈடுபாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசு இத்திட்டத்தை ரத்து செய்து விட்டது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. காரைக்கால் பகுதியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் கைவிட்டுப் போனதற்கு ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசுதான் காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

உயரிய கல்வி நிறுவனம் காரைக்காலில் அமையவிருந்த கைவிட்டுப் போனது கல்வி ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Indian maritime university campus plan in Karaikal, Puduchery Union Territory has been cancelled by Union Government.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia