நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்கள், முதியவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் காலை 8.45 க்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து, கொரோனா காலத்தில் சேவைப் பணியாற்றிய பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து, தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விடுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நேரில் சென்று இனிப்பு வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுதந்திர தின விழாவைக் காண மூத்த குடிமக்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை டிவி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












