சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெறும் என சுகாதாரச் செயலாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்த நிலையில், கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று கல்லூரி, பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது திறக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதர ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலான வகுப்புகளே தொடர்கின்றன.
இந்நிலையில், சென்னை ஐஐடி-யில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் என சுமார் 104 பேருக்கு கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனா பாதித்த மாணவர்கள் சிகிச்சையில் நலமாக உள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சென்னை ஐஐடி-யில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நமக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, அண்ணா பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு சுமார் 700 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications












