தேர்வில் கலக்க வேண்டுமா... ஞாபக சக்தியை அதிகப்படுத்த சில டிப்ஸ்!

Posted By:

சென்னை: மாணவர்களே பொதுத் தேர்வு மிகவும் அருகில் வந்து விட்டது. நீங்கள் அனைவரும் பரபரப்பாக படித்துக் கொண்டிருக்கும் நேரம் . நன்றாகப் படிக்க வேண்டும் அதே சமயத்தில் படித்தவைகளை நன்கு ஞாபகத்தில் வைத்து தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்.

சிலர் என்னதான் படித்தாலும் ஒன்றுமே ஞாபகத்தில் இருப்பது போல் தோன்ற வில்லையே என வேதனைப்படுவதுண்டு. அப்படி வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களே இதோ அருமையான டிப்ஸ் உங்களுக்காக

மாணவர்கள் பாடங்களைப் படிக்கும் போது அதில் முழுக் கவனத்தையும் செலுத்திப் படிக்க வேண்டும். ஏனோதானோ என்று படிக்கக் கூடாது. எவ்வளவு நேரம் படித்தீர்கள் எவ்வளவு கேள்விகள் படித்தீர்கள் என்பதை விட எப்படிப் படித்தீர்கள் என்பதுதான் முக்கியம்.

படிப்பதில் அதிக கவனம் தேவை -

பாடங்களைப் படிக்கும் போது அதில் முழு முயற்சியுடன் ஈடுபாடுடன் படிக்க வேண்டும். அயோ படிக்கனுமே என்று நினைத்துப் படிக்கக் கூடாது. முதலில் உங்கள் மனதை நல்ல ரீலாக்சாக வைத்துக் கொண்டுதான் படிக்க ஆரம்பிக்க வேண்டும். படிக்கும் பாடத்தினை கண்ணும் கருத்துமாகப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அது மனதில் நன்றாகப் பதியும். ஒரு பாடத்தை ஒருமுறை படிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது பல முறைப் படித்து படித்து ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் படிக்கும் பாடங்கள் ஞாபகத்தில் இருக்கும்.

பாடங்களை வரிசையாகப் படியுங்கள் -

பாடங்களைப் படிக்கும் போது ஒரு கோர்வையாகப் படிக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு பெரிய கேள்வியைப் படிக்க வேண்டும் என்றால் முதலில் அதனை எளிய பாயிண்ட்களாகப் பிரித்து வைத்துக் கொண்டு அதனை வரிசைப் படுத்தி படிக்க வேண்டும். அப்பொழுது அது உங்களுக்கு கஷ்டமாகத் தெரியாது. மேலும் வரலாறு பாடங்களைப் படிக்கும் போது நீங்கள் ஆண்டுகளை வரிசைப்படுத்தி படிக்கும் போது உங்களுக்கு அது எளிதில் ஞாபகம் வரும். படிக்கும் பாடங்களை கோர்வையாகப் படிக்கும் போது அது உங்களுக்கு மிக எளிதாக ஞாபகத்தில் இருக்கும். வேதியியல் பாடங்களைப் படிக்கும் போது நிகழ்வுகளை ஒழுங்குப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது எளிதாக இருக்கும். ஒவ்வொருப் பாடங்களையும் படிக்கும் முன்பு அதிலுள்ளவற்றை வரிசைப்படுத்தியும் நிகழ்வுகளை ஒழுங்குப்டுத்தியும் படிப்பது நன்மை பயக்கும்.

எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தவும் -

மாணவர்கள் படிக்கும் போது எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி படிக்க வேண்டும். பாடங்களைப் படிக்கும் போது அதனுடன் பொருத்தமான நிகழ்வுகள், விஷயங்கள், பெயர்களைப் பொருத்தி படிக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் வரலாறு பாடம் படிக்கும் போது அதில் உள்ள மன்னர் பெயரை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள அது சம்பந்தப்பட்ட உங்கள் நண்பரின் பெயர் அல்லது உங்களுக்கு அறிமுகமானவரின் பெயர்களை இணைத்துப் படிக்கலாம். அப்போது தேர்வின் போது உங்களுக்கு நல்ல ஞாபகத்தில் இருக்கும். என்னுடைய பள்ளிக் காலத்தில் என் ஆசிரியர் ஒரு அருமையான உதாரணத்தை இயற்பியல் பாடம் படிக்கும் போது கற்றுக் கொடுத்திருக்கிறார். அந்த வழிமுறையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். கிட்டப் பார்வை தூரப் பார்வைப் பற்றி இயற்பியல் பாடத்தில் வரும் அதற்கு கிட்டக் குழித் தோண்டி தூரக் குவி என்று படிக்கும் போது கிட்டப் பார்வைக்கு குழி லென்ஸ் தூரப் பார்வைக்கு குவி லென்ஸ் என எளிதாக ஞாகம் வைத்துக் கொள்ளலாம். இது போன்று இயல்பான பொருந்தக் கூடிய வார்த்தைகளை மனதில் வைத்து படிக்கும் போது அது மறக்கவே மறக்காது .

புதியவைகளை இணைத்தல் -

ஒரு பாடத்தைப் படிக்கும் போது அது சம்பந்தப்பட்ட தகவல்கள் புதிதாகக் கிடைக்கும் போது அதையும் சேர்த்துப் படிக்க வேண்டும். புதிய தகவல்களைப் படித்து விட்டு பழைய தகவல்களை படிக்காமல் விட்டுவிடக் கூடாது. பழைய தகவல்களையும் அவ்வப்போது ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் அத்துடன் புதிய தகவல்களை இணைத்துப் படிக்க வேண்டும். தகவல்களைப் படிக்கும் போது நன்றாக மனதில் வைத்து மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். அப்போதுதான் நன்கு ஞாபகம் வரும்.

தொடர்ந்து படியுங்கள் -

பாடங்களைப் படிக்கும் போது தினமும் படிக்க வேண்டும். ஒரு நாள் படிப்பது அடுத்த நாள் படிப்புக்கு லீவு விடுவது கூடாது. தினமும் பாடங்களைப் படிக்க வேண்டும். புரிந்து படிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் படித்து மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இடைவெளி விடாமல் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாள் படிக்க முடியவில்லை என்றாலும் படித்த பாடங்களை நினைவுப் படுத்தியாவதுக் கட்டாயம் பார்க்க வேண்டும். மனத்திரையில் படித்தவைகளை ஓட விட்டு நினைவுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். படித்த பாடங்களை அவ்வப் போது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள். பாடங்களை மனதில் அசைப் போட்டுக் கொண்டேயிருங்கள்.

ஓய்வு அவசியம் -

தேர்வு நேரத்தில் மட்டும் சிலர் விடியவிடிய கண்விழித்துப் படிப்பார்கள். அது ரொம்ப தவறானதாகும். தினமும் பாடங்களைப் படிக்கும் போது சிறிய சிறிய இடைவெளிகளைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக மாணவர்கள் படிக்கும் போது மூளை சோர்வடைந்து விடும். அவ்வப் போது சிறிய ஓய்வினை எடுக்க வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 அல்லது 10 நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும். அந்த ஓய்வின் போது சிறிது தண்ணீர் குடிக்கலாம், சற்று தூரம் காலாற நடக்கலாம், அமைதியாக உட்காரலாம், சிறிது இனிப்புகளை சாப்பிடலாம், உற்சாகத்தை தூண்டக் கூடிய சிறு பாடல்களைப் பாடலாம். இது போன்ற காரியங்களைச் செய்யலாம். ஆனால் அதிலேயே மூழ்கி விடக் கூடாது. நேரத்தை வீண் அடிக்கவும் கூடாது. அளவோடு ஓய்வினை மேற்கொண்டு முழுமனதோடு பாடங்களைப் படிக்க வேண்டும்.

சாப்பிடும் முறை -

தேர்வு நாட்களில் மாணவர்கள் ரொம்ப ஹெவியாக சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடும் போது அது ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்தும். அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். குளிர் பானங்கள் மற்றும் லிக்யூடாக சாப்பாடு அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. நீர் சத்து உடம்பிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அது புத்துணர்ச்சி மற்றும் புது உற்சாகத்தைத் தரும். உடலில் நீர்ச்சத்துக் குறையும் போதுதான் உடம்பு சோர்வடையும். அதனால் நீர் மோர், பழச்சாறு, இளநீர், பதநீர் போன்றவற்றை அருந்துங்கள்.

English summary
According to scientific studies, it is possible to increase your brain capacity. Several medical research studies have concluded that different types of techniques like exercise, hypnosis, cognitive therapy, special diet, stress management, memory improvement games, and certain natural medications can help increase mental capacity.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia