வெளிநாடுகளில் மேற்படிப்பு – எந்த அளவிற்கு சாத்தியம்?

Posted By:

சென்னை:இன்றைய இளைஞர்களின் மனத்தில் நீங்காது இன்று நின்று கொண்டு இருக்கும் கேள்வி தான் அடுத்தது என்ன என்பது.

ஒரு சிலருக்கு இளநிலைப் பட்டம் வாங்கியாயிற்று, ஆனால் வேலை வாங்கியபாடில்லையே என்ற கவலை.

இன்னும் சிலருக்கு வேலை பிடிக்கவில்லையே என்ற கவலை. மேலும் சிலருக்குத் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு சாதிக்கச் சரியான இடம் அமையவில்லையே என்ற கவலை.

இவர்கள் அனைவரின் மனங்களிலும் இருப்பது ஒரு கேள்வி. அடுத்தது என்ன... மேலே ஏதாவது படிக்கலாமா?

கேள்விக்கென்ன பதில்:

எளிய கேள்வி தான். ஆனால் இந்த கேள்விக்குத் தான் இன்றைய இளைஞர்கள் முடிவெடுக்கத் திணறுகின்றார்கள் அல்லது பல காரணங்களால் திணறடிக்கப் படுகின்றார்கள்.

என்ன படிக்கலாம்:

ஆனால் என்னப் படிப்பது?... எங்குப் படிப்பது?... படித்தால் வேலைக் கிடைக்குமா? போன்ற கேள்விகள் அவர்களை முடிவெடுக்க விடாது தடுக்கின்றன.

கழுத்தை நெறிக்கும் கட்டணம்:

ஐயோ, நாம் இது வரை படித்ததிற்கே இவ்வளவு செலவாகி விட்டதே இதற்கு மேலும் நாம் படித்தால் அந்தப் பணத்தை நாம் எங்குச் சென்று சம்பாதிப்பது என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் பிடிங்கிச் சென்று விடுகின்றது.

குறையாத கல்விச் செலவு:

இலவசமாகத் தொலைக்காட்சியையும் மற்ற பொருட்களையும் தரும் அரசாங்கம் கல்விக் கட்டணத்தை மட்டும் குறைக்காது வருடத்திற்கு வருடம் உயர்த்திக் கொண்டே போகின்றது.

லட்சக் கணக்கில் செலவு:

இளநிலை பட்டத்தை முடிப்பதற்கே கிட்டத்தட்ட 4இல் இருந்து 5இலட்சம் வரை பணம் செலவழிந்த நிலையில் மேலும் படிக்கச் செல்ல அவர்கள் தயங்க வேண்டி இருக்கின்றது.

தனியாரில் அதிகம்:

தமிழகத்தில் அவர்கள் பொறியியல் துறையில் மேற்படிப்பு படிக்கலாம் என்று எண்ணினால், அரசுக் கல்லூரிகளைத் தவிர மற்றக் கல்லூரிகளில் அதற்காக மேலும் ஒரு 3 இலட்சத்தினை எடுத்து வைக்க வேண்டி இருக்கின்றது.

வெளிநாட்டுக் கல்வி:

இந்த நிலையில் தான் நாம் வெளி நாடுகளில் சென்று படிப்பதைப் பற்றியும் அறிய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஏற்றுக் கொள்ளும் பல்கலைகள்:

வெளிநாடுகளில் செலவு கண்டிப்பாகக் குறைய ஆகாது ஆனால் அந்தச் செலவை முழுதும் அவர்களே ஏற்றுக்கொள்ளும் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

வெளிநாட்டுப் படிப்புகள்:

வெளிநாடுகளில் உள்ள கல்வி முறை, பல்கலைக்கழகங்கள், அவற்றில் நுழைய நாம் எழுத வேண்டிய தேர்வுகள், கல்விக் கட்டணங்கள், கல்விக் கட்டணத் தள்ளுபடிகள், அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் ஆகியவற்றைப் பற்றியும் அந்தப் பல்கலைக்கழகங்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பதினைப் பற்றியும் நாம் தெளிவாகப் பார்ப்போம்.

மாணவர் சேர்க்கை:

நம்முடைய நாட்டில் ஆண்டிற்கு ஒரு முறை தான் மாணவர் சேர்க்கை கல்லூரிகளில் நடைபெறுகின்றது. ஆனால் பெரும்பாலான வெளி நாடுகளில் ஆண்டிற்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும். ஒன்று வசந்த கால மாணவர் சேர்க்கை(Spring intake) மற்றொன்று இலையுதிர் கால மாணவர் சேர்க்கை (fall intake).

விண்ணப்பிக்கும் காலகட்டம்:

இலையுதிர் காலச் சேர்க்கையின் பொழுது கல்லூரிகள் ஆகஸ்ட்(August -September) மாதம் பொதுவாகப் பாடத்தினைத் தொடங்குவார்கள். இதற்குரிய விண்ணப்பங்கள் டிசம்பர் மாதம் முதலோ, ஜனவரி மாதம் முதலோ கொடுக்கத் தொடங்கப்பட்டு பொதுவாக மார்ச் மாதத்தில் விண்ணப்பங்களை அனுப்ப இறுதி நாள் குறிக்கப்படும். இந்த நாட்கள் கல்லூரிக்குக் கல்லூரி, நாட்டிற்கு நாடு வேறுபடும்.

வசந்த கால சேர்க்கை:

வசந்தக் காலச் சேர்க்கையிலோ ஜனவரி அல்லது பிப்ரவரி (February) மாதம் கல்லூரிகள் தொடங்கப்படும். அதற்குரிய விண்ணப்பங்களோ ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு செப்டம்பர் மாதத்திற்குள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு இறுதி நாள் குறிக்கப்படும். இந்த நாட்களும் கல்லூரிக்குக் கல்லூரி, நாட்டிற்கு நாடு வேறுபடும்.

இரண்டு சேர்க்கைக்கும் வேறுபாடு என்ன?:

இந்த இரண்டு சேர்க்கையிலும் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், இலையுதிர் காலச் சேர்க்கையில் ஒரு கல்லூரியில் இருக்கும் அனைத்துப் படிப்பிற்கும் ஆள் சேர்க்கை நடைபெறும். அதாவது எந்தப் படிப்பிற்கு வேண்டும் என்றாலும் ஒரு மாணவன் விண்ணப்பிக்கலாம்.இது தான் அவ்வாண்டின் முதன்மையான சேர்க்கை.

சில படிப்புகளுக்கு மட்டுமே:

ஆனால் வசந்த காலச் சேர்க்கையிலோ சில படிப்புகளுக்கு ஆள் சேர்க்கை நடைபெறாது. ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

மாணவர் சேர்க்கை குறித்த தெளிவு:

எனவே மாணவர்கள் தாங்கள் என்ன படிப்பிற்கு விண்ணப்பிக்கப் போவதாக இருந்தாலும் அந்த விண்ணப்பத்திற்கான நாட்களையும், அது எந்தச் சேர்க்கை என்பதையும், ஒரு வேளை அது வசந்த காலச் சேர்க்கையாக இருந்தால் அவர் விண்ணப்பிக்கும் படிப்பிற்கு அந்தச் சேர்க்கையில் ஆள் சேர்க்கை நடைபெறுகின்றதா என்பதையும் தெளிவாக முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

இணையத்தில் தெரிந்து கொள்ள:

அந்த செய்திகள் அனைத்தும் அந்தக் கல்லூரிகளின் இணையத்தளங்களிலேயே தெளிவாகக் கொடுக்கப்பட்டு இருக்கும்.

English summary
Foreign countries are giving various studies to the Indian students with scholarship and low fees structure.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia