முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை.. உயர்நீதி மன்றம் உத்தரவு..!

Posted By:

சென்னை : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். நம்புராஜன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடல் கல்வி இயக்குனர்கள் நிலை 1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த மே 9ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக உள்ளது.

இதில் 40 முதல் 70 சதவீத உடல் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஊனத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மேலும் இது கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 2ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு 67 இடங்கள்

மொத்தம் 1663 ஆசிரியர் பதவிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெறும் 18 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, 4 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால் 3 சதவீத இடங்கள் மட்டும் ஒதுக்குவதாக கூறி, அதைவிட குறைவான இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது. 4 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 67 இடங்கள் வழங்க வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு

எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும், உடல் ஊனம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கியும், புதிய அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு குறித்து கடந்த மே 9ந் தேதி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அரசு நடவடிக்கை

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தேர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார். அப்போது நீதிபதிகள் மாற்றுத்திறனாளிகளின் உடல் ஊனம் 40 முதல் 70 சதவீதம் இருக்க வேண்டும். என்று எந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு நிர்ணயம் செய்தது? இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

பணி நியமன உத்தரவிற்கு தடை

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை வருகிற 16ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவிக்கான தேர்வு நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளலாம். ஆனால் பணி நியமனம் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

English summary
The High Court has ordered the Teacher Board of Examinations to appoint pg teachers for the selection process but not to issue a work appointment order.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia