தேர்வுகளில் ஏக கெடுபிடி.. மாணவர்கள் திணறல்

Posted By: Jayanthi

சென்னை: தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடித்தால் கண்காணிப்பாளரை தேர்வுத் துறை சஸ்பெண்டு செய்வதை அடுத்து, மாணவர்களிடம் கண்காணிப்பாளர்கள் கடுமையாக நடக்கத் தொடங்கியுள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தற்போது நடந்துவருகின்றன. இந்த தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் இருக்க தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதையும் மீறி கிருஷ்ணகிரியில் 4 ஆசிரியர்கள் கணக்கு கேள்வித்தாளை வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில், தேர்வு நேரத்தில் பிட் அடித்து சிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில பள்ளிகளே மாணவர்களுக்கு உதவும் வகையில் நடந்துகொள்கின்றன.

தேர்வுகளில் ஏக கெடுபிடி.. மாணவர்கள் திணறல்

இதையடுத்து, ஒவ்வொரு நாளும் தேர்வுத்துறை ஒரு உத்தரவை வெளியிட்டு வருகிறது. இந்த உத்தரவுகள் அனைத்தும் வாய்மொழியாகத்தான் வருகிறது. இதனால் ஆசிரியர்கள் அந்த உத்தரவைபின்பற்ற தயக்கம் காட்டுகின்றனர். தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடித்து கண்காணிப்பாளரிடம் சிக்கினால் மாணவரிடம் உள்ள துண்டுச் சீட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு தேர்வு எழுத அனுமதிப்பார்கள். மாணவர் மீது நடவடிக்கை எடுத்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றே அப்படி செய்வது வழக்கம். ஆனால் இப்போது அப்படி செய்யக் கூடாது என்று தேர்வுத்துறை வற்புறுத்துகிறது.

ஆசிரியர்கள் தயக்கத்தாலும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலும் பிட் அடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த அறையின் கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை மெமோ கொடுத்துள்ளது. இதனால் கண்காணிப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனால், தேர்வு அறைக்குள் மாணவர்கள் வரும் போதே அவர்களை கடுமையாக சோதிக்கின்றனர்.

மாணவர்கள் கொண்டு வரும் புத்தகப் பை உள்ளிட்ட பொருட்களை 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அறையில் வைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஏற்கெனவே ஷூ டை, பெல்ட் ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ள நிலையில், தற்போது மாணவர்கள் செருப்பு அணிந்து வருவதைக்கூட கண்காணிப்பாளர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். மேலும் தேர்வு முடியும் வரையிலும் ஒவ்வொரு மாணவரையும் தீவிரமாக கண்காணிக்க தொடங்கிவிட்டனர். இதனால் மாணவர்கள் மீதான பிடி தற்போது இறுகியுள்ளது. கடுமையான சோதனையில் மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

English summary
High vigilance in public exam halls caused the students panic and fear.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia