மூளை, மனசை ஃபிரியா விடுங்க... பரீட்சையை ஈசியா எழுதலாம்.. தலைமை ஆசிரியரின் அட்வைஸ்

Posted By:

சென்னை : மாணவர்களுடைய மூளை ஆக்டிவா இருக்கணும் மனசு பிரியா இருக்கணும். அப்படி இருந்தாதான் அவங்களால சுறுசுறுப்பா செயல்பட முடியும் என்று தலைமை ஆசிரியர் இளமாறன் கூறியுள்ளார்.

தேர்வுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக அவர் அளித்துள்ள சில ஆலோசனைகள்:

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனசு விட்டு பேசணும் அது அவர்களுக்கு மிகவும் ஆதராவக இருக்கும். மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடாது. உன்னால் முடியும் என்ற நம்பிக்கை உணர்வைத்தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை, முயற்சியே திருவினையாக்கும் என நம்பிக்கையை அதிகரிக்கும் வார்த்தைகளையே மாணவர்களிடம் பேச வேண்டும்.

மூளை, மனசை ஃபிரியா விடுங்க... பரீட்சையை ஈசியா எழுதலாம்.. தலைமை ஆசிரியரின் அட்வைஸ்

பரீட்சை மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது. அது வாழ்வில் காணப்படும் ஒரு அத்தியாயம் தான். தேர்விற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் கல்வி மட்டுமே வாழ்க்கைய தீர்மானிப்பது இல்லை என்பதையும் மாணவர்கள் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பெற்றோர்கள் அது மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை என்பதையும் உணர்த்த வேண்டும்.

மாணவர்களின் உணவு பழக்க வழக்கம் நன்றாக இருக்க வேண்டும். சாத்தான காய்கறி முட்டை, கீரை மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவினை அதிகம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச் சத்து உணவுகளையும் அவ்வப் போது எடுத்துக் கொள்வது நல்லது. மிதமான உணவு, கேடு விளைவிக்காத உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும். ஹெவியாக சாப்பிடக் கூடாது.

தேர்வுக்கு முதல்நாள் மட்டும் விடிய விடிய படிப்பது உதவாது. வருடம் முழுவதுதும் படித்த பிறகுதான் மாணவர்கள் பொதுத் தேர்வினை மேற்கொள்கிறார்கள். எனவே சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல ஆரம்ப நாளிலிருந்தே தினமும் ஒழுங்காகப் படித்து வந்தால் இறுதித் தேர்வு நெருங்கும் நாளில் பயப்படத் தேவையில்லை. விடிய விடிய படிக்கவும் தேவையில்லை.

அதிகாலை படிப்பு நன்மை பயக்கும். அதிகாலையில் எழுந்து படிக்கும் போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும் நரம்புகள் தூண்டப்படும். அதிகாலை வேளை அமைதியாகவும் இருக்கும் எனவே அதிகாலையில் படிப்பது நன்மை பயக்கும். நல்ல ஞாபத்திலும் இருக்கும். வெது வெதுப்பான தண்ணீரில் குளித்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

இந்த ஆண்டு தேர்வுகளுக்கிடையே நிறைய நாட்கள் விடுமுறை இருக்கிறது. அந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளலாம். விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி நன்றாகப் படியுங்கள். நல்ல ரிவிசன் விடுங்கள்..

தேர்வுக்கு முதல்நாள் புதிதாக எதையும் படிக்க முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால் இயல்பாகவே தேர்வு என்றாலே சிறு பதைபதைப்பு மாணவர்களிடையேக் காணப்படும். அந்த சூழ்நிலையில் நீங்கள் புதிய முயற்சியை எடுக்கக் கூடாது. புதிதாக எதையும் படிக்கக் கூடாது. ஏற்கெனவே படித்ததை ரிவிசன் கட்டாயம் விட வேண்டும்.

தேர்வுக்கு உரிய நேரத்திற்கு முன்னாடியே கிளம்பி போவது நல்லது. தேர்வு நாளில் தேர்வுக் கூடத்திற்கு தேர்வு நடைபெறும் நேரத்திற்கு முன்னதாகவே செல்ல வேண்டும். தாமதமாக செல்லக் கூடாது. அது உங்களை பதட்டத்திற்குள்ளாக்கி விடும். தேர்வு அறைக்கு செல்லும் முன் ஒருமணி நேரம் அமைதியாக இருப்பது நல்லது. அப்படி நீங்கள் இருக்கும் போது அது தேவையற்ற படபடப்பை குறைக்கும். படபடப்பு இல்லாமல் தேர்வுக்கு செல்வது நீங்கள் பாதி தேர்ச்சி பெற்றதற்குச் சமம் ஆகும்.

எழுத வேண்டிய வினாக்களை தேர்வு செய்வது முக்கியமானதாகும். குறைந்த நேரமே தேவைப்படும் வினாக்களை தேர்வு செய்து எழுதுவது மிகவும் நல்லது அது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். பாயிண்ட் அடிப்படையில் பதில் எழுதக்கூடிய வினாக்கள் முழு மதிப்பெண் பெற்றுத்தரும். ப்ளு, கறுப்பு தவிர வேறு நிற மை பேனா பயன்படுத்தக்கூடாது.

வினாக்கான விடைகளை எழுதும் போது விடைகளுக்கான நம்பர்களை சரியாக எழுதியிருக்கிறீர்களா என சரிபாருங்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள். தேர்வறை ஒழுக்கத்தை கடைபிடியுங்கள்.

தேர்வு முடிந்து வந்த பின்னர் எழுதிய விடை சரிதானா என்று சரிபார்ப்பது தேவையில்லாதது. அடுத்த தேர்வினை அது பாதிக்கும். அது உங்களை சோர்வடையச் செய்யும். தேர்வு முடியும் போது பசியின் காரணமாகவோ, வெயிலின் காரணமாகவோ, வெளியில் விற்கும் சுகாதாரமற்ற உணவுப் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது. அது உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கும்.

தேர்வு நடைபெறும் தேதியை தவற விடக்கூடாது. ஒரு வேளை உங்களுக்கு காயம் ஏதும் ஏற்பட்டு கையால் எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் உரிய நேரத்தில் கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கும் போது அவர்கள் தேர்வு எழுதுவதற்கு உதவியாளர்களை நியமிப்பர் அவர்கள் மூலம் நீங்கள் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.

பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆசிர்வாதத்தோடு தேர்வு அறைக்குச் செல்லுங்கள். அந்த ஆசீர்வாதம் உங்களுடன் கூடவே வரும்.

English summary
Students in Tamil Nadu are facing the annual examination and here are some tips from a reputed school Head master.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia