தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் கேள்வி பதில்கள் தவறாக உள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் மதிப்பெண்கள் வழங்கிய போதும், மனுதாரர் தேர்ச்சி பெறாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தமிழக அரசுத் துறையில் சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 139 காலிப்பணியிடங்கள் நிரப்பிடும் வகையில் கடந்த மார்ச் மாதம் குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஏப்ரல் 3ம் தேதி வெளியான நிலையில், இத்தேர்வில் பங்கேற்ற விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
பல கேள்விகள் தவறானது
அவரது மனுவில், டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி பார்த்திபன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கூடுதல் மதிப்பெண் பெற்றும் பெயில்
அப்போது டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குரூப் 1 தேர்வில் 18 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டது குறித்து மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. மேலும், கேள்வி தவறாகக் கேட்கப்பட்டதால், அதற்கு ஈடாகத் தேர்வர்களுக்கு 6 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மனுதாரர் விக்னேஷ் தேர்ச்சி பெறவில்லை. எனவே, அவர் தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் வாதம் முன் வைத்தார்.
வழக்கு தள்ளுபடி
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் விக்னேஷ் தாக்கல் செய்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விற்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இதனால், ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவுகள் இறுதியானது.


Click it and Unblock the Notifications












