உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கும் அடுத்த 4 வாரத்திற்குள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் எனவும், இந்த ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவினை ரத்து செய்வதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான 632 பேரின் பெயர்களை 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதனிடையே, இந்த தேர்விற்கான அறிவிப்பாணையில் கல்வித்தகுதி குறித்து முறையாகக் குறிப்பிடப்படவில்லை என தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்ய வேண்டும், இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட தனி நீதிபதி, தேர்வுக்காக வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பாணை முறையாக இல்லை எனக்கூறி தேர்ச்சி பெற்றோரின் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
விசயம் தெரியாத நீதிபதி:-
தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இதனைக் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணை செய்யப்பட்டது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர்கள் தரப்பில், முறையான கல்வித் தகுதி பெற்றவர்கள் தான் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் என பதிலளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு 2018, அக்டோபர் 12 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை உறுதி செய்தும், தேர்வு அறிவிப்பை ரத்து செய்து பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 4 வாரத்தில் பணி நியமன ஆணைகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.