சென்னை: ஹரியாணாவில் வினாத்தாள் லீக்கானதால் அங்கு ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் நவம்பர் 14, 15-ம் தேதிகளில் ஹரியாணா ஆசிரியர் தகுதித் தேர்வு- லெவல் 3 நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்வுக்கான வினாத்தாள் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 7 பேரை போலீஸார் ரோஹ்டாக் பகுதியில் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.
இந்தத் தேர்வை சசுமார் 4.61 லட்சம் பேர் எழுதுவதாக இருந்தனர்.
ஆனால் வினாத்தாள் லீக்கானது தெரிந்ததும் தேர்வை ரத்து செய்வதாக ஹரியாணா மாநில பள்ளிக் கல்வி வாரியச் செயலர் பங்கஜ் குமார் அறிவித்தார்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது: ஹரியாணாவில் வினாத்தாள் லீக்கானதால் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் பல லட்சம் பேருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மணிக்கணக்காக படித்த மாணவர்களின் நேரம் வீணாகிப் போனது என்றார் அவர்.
தேர்வை நியாயமான முறையிலும், வெளிப்படையாகவும் நடத்துமாறு ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார்.