குட்டீஸ்.... ஜாலியா இருக்கீங்க போல... தேசியக்கொடி ஏற்றி, செல்பி போட தயாராகிட்டீங்க....! சரி உண்மையை சொல்லுங்க... சுதந்திர தினம் என்றால் அன்றைய தினம் கொடியேற்றி சாக்லெட், இனிப்பு வழங்குவாங்க... அதை வாங்க தான் நாம எல்லோரும் பள்ளி படிக்கும் போது காலையில குளிச்சுட்டு டிரஸ் போட்டுட்டு போவோம்...! யாரும் இதை மறைக்க, மறக்கவோ முடியாது...!
சரி அது இருக்கட்டும்; நம்மில் எத்தனை பேருக்கு, எப்போது சுதந்திரம் கிடைச்சது; சுதந்திரம் என்றால் என்ன; தேசியக்கொடி எப்போது ஏற்கப்பட்டது; எத்தனையாவது சுதந்திரம் தினம் கொண்டாட போறோம்; பிரதமர் அறிவித்த, 'ஹர் கர் திரங்கா' இயக்கம் என்ன என்பது குறித்து சொல்லுங்களேன் பார்ப்போம்...!
சாக்லெட் சாப்பிட்டு வந்துருவோம், சுதந்திர தினத்தன்று, அந்த நாளை வெகு விமரிசையாக

கொண்டாடவும், அந்த சுதந்திரம் கிடைக்க, எத்தனை நல் உள்ளங்கள், தலைவர்கள் தன்னுயிரை நீத்துள்ளனர் என்ற வரலாறு குறித்த தகவல்களை நாம ஒரு முறையாவது படித்து பார்க்கனும் குட்டீஸ்...!
சுதந்திரம் என்றால் என்ன?
நீங்கள் செய்யும் காரியங்கள்/ செயல்கள் மற்றவரை பாதிக்காது எனில், அது தான் உண்மையான சுதந்திரம். அவ்வாறு நடந்து கொண்டாலே, உங்களால சுதந்திரத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை குட்டீஸ்.
நாம் செய்யும் செயல்களை பொறுத்து தான் தனி மனித சுதந்திரமும் இருக்கிறது என்பதையும் தெரிஞ்சுக்கோங்க...! தனி மனித சுதந்திரம், பேச்சு, கருத்து சுதந்திரம் நமக்கு கிடைக்க, நம் முன்னோர்கள் பலர் தங்களின் இன்னுயிரை நீத்து, அவற்றை நமக்கு வாங்கி தந்து இருக்காங்க....!
75வது ஆண்டு
நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை, ஒவ்வொரு குடிமக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடும் வகையில், மத்திய அரசு தேசியக்கொடி ஏற்றுவதில் இருந்த சில தடைகளை தளர்த்தி, அனைவரும் மூவர்ணக்கொடிக்குரிய மரியாதைக்கு பாதகம் ஏற்படாமல் கொடி ஏற்றலாம் அறிவித்துள்ளது.

ஹர் கர் திரங்கா
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீட்டுக்கு வீடு தேசிய கொடியை ஏற்றுங்கள்; ஆகஸ்ட் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு இடையேயான நாட்களில், ஒவ்வொருவரின் வீடுகளிலும், தேசிய கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப் படுத்துங்கள் என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் மூவர்ணக்கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக, 'ஹர் கர் திரங்கா' பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இது, மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
நாடு முழுவதும் 250 மில்லியன் வீடுகளில், தானாக முன் வந்து மூவர்ணக் கொடியை ஏற்றி, 75வது சுதந்திர தினத்தை, அனைவரும் கொண்டாட திட்டமிட்டு, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஹர் கர் திரங்கா பிரசாரம், ஜூலை 22ல் பிரதமரால் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு இந்தியரும், தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்; தங்கள் மனதில் உள்ள தேசப்பற்றை வெளிப்படுத்தி, தேசியக் கொடி குறித்த விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்பதே, இந்த பிரசாரத்தின் நோக்கமாகும்.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், இதற்காக பிரத்யேக இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதின் வாயிலாக பங்கேற்கவும் அறிவுறுத்தியுள்ளது.
அனைவரும் பங்கேற்க அழைப்பு
இந்திய கலாச்சாரத்தின் மகத்துவத்தை உலகெங்கும் பறைசாற்றும் வகையில், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 150+ நாடுகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
தொடர்ந்து, தேசப்பற்றை பறைசாற்றும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. சமூக வலைதளங்கள் அனைத்திலும் மூவர்ணக்கொடி, அது சார்ந்த நிகழ்வுகள் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.
'போர்' அடிக்குது?
முதலில் கொஞ்சம் போர் அடிச்சாலும் வரலாறு படிக்க, படிக்க சுவாரசியமான தகவல்களையும், வெளி உலகக்கு தெரியாத பல தலைவர்கள், அவர்கள் பற்றிய தகவல்களையும் நமக்கு அள்ளி தரும் அட்சயபாத்திரம் என்பதை மறக்காதீங்க குட்டீஸ்...!

'ட்ரைகலர்' குறித்து அறிவோம்?
இந்திய தேசியக்கொடி சட்டம், 2002, ஜனவரி 26, 2002 அன்று நடைமுறைக்கு வந்தது. அது என்னனா...!
மூவர்ணக்கொடி எப்படி இருக்க வேண்டும்; தேசியக் கொடியைப் பயன்படுத்துதல், காட்சிப்படுத்துதல் மற்றும் ஏற்றுதல் போன்ற நடைமுறைகளை நிர்வகிக்கும் விதிகள், சட்டங்கள், நடைமுறைகள், மரபுகள் மற்றும் அறிவுறுத்தல்களின் தொகுப்பாகும்.
நைட் கொடி ஏற்றலாம்...!
தடையின்றி அனைவரும் மூவர்ணக்கொடியை ஏற்றி, 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், தேசியக்கொடி சட்டம் 2002ல் திருத்தம் மேற்கொண்டு, முந்தைய விதிகளில் இருந்து தடைகளில் தளர்வை, ஜூலை 20, 2022 அன்று அறிவித்தது.
அதாவது, பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்டது. சூரிய உதயத்திற்கும் சூரிய அஸ்தமனத்திற்கும் இடையில் மட்டுமே கொடியை ஏற்றலாம் என்பது முந்தைய விதி.
இந்த திருத்தத்தின்படி, எந்த ஒரு இடத்திலும், பொதுமக்கள் மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றுவதற்கு தடை இல்லை.
அதே சமயம், தேசியக்கொடிக்கு அவமதிப்பு நடத்தப்பட்டால் மூன்றாண்டு சிறையுடன் அபராதமும் விதிக்கப்படும்.
புதிய விதிகளின்படி, காதி துணி மட்டுமன்றி பாலிஸ்டர் துணி கொடிகளும் பயன்படுத்தப்படலாம். அத்துடன், மாலையில் கொடியை இறக்க வேண்டிய கட்டாயமில்லை. இரவிலும் தேசியக்கொடி பறக்கலாம்.
கொடியேற்றுவது தொடர்பான விதிகள் முன்பு இருந்ததை விட, தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
விளையாட்டு அல்ல குட்டீஸ்....கட்டாயம் பின்பற்றுங்க..
· தேசியக்கொடியை தலைகீழான நிலையில் ஏற்றக்கூடாது; அதாவது காவி நிறப்பட்டை அடிப்பகுதியில் இருக்கக் கூடாது.
· கிழிந்த அல்லது கசங்கிய தேசியக் கொடியை காட்சிப்படுத்தப்படக் கூடாது.
· தேசியக் கொடிக்கு அருகில் அதைவிட உயரமாகவோ அல்லது இணையாகவோ எந்த ஒரு கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது;
· தேசியக்கொடி பறக்கும் கொடி கம்பத்திற்கு மேல் பூக்கள் அல்லது மாலைகள் அல்லது அடையாள சின்னங்கள் உள்ளிட்ட எந்தப் பொருளும் பொருத்தப்படக்கூடாது.
· தேசியக் கொடியை மாலையாகவோ, பூங்கொத்தாகவோ, அழகுப்பொருளாகவோ அல்லது எந்தவகையான அலங்காரத்திற்கோ பயன்படுத்தக் கூடாது.
· தேசியக் கொடி தரையில் விழவோ, தண்ணீரில் மிதக்கவோ விடக்கூடாது
· தேசியக் கொடி எந்தவிதத்திலும் கிழியும் வகையில் காட்சிப்படுத்தப்படக் கூடாது
· தேசியக் கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது
· உரையாளரின் மேசை மீது விரிப்பாகவோ, உரையாளரின் மேடை மீதோ தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது
· அலங்கார ஆடையின் பகுதியாக அல்லது சீருடையாக அல்லது எந்தவொரு நபரும் இடுப்புக்கு கீழே அணியும் துணியாக தேசியக்கொடி பயன்படுத்தப்படக் கூடாது.
· மெத்தைகள், கைக்குட்டைகள், நாப்கின்கள், உள்ளாடைகள் அல்லது மற்ற ஆடைகளில் அச்சிட்டோ அல்லது பின்னலிட்டோ (embroid) தேசியக்கொடி வடிவத்தை பயன்படுத்தக் கூடாது
· மறக்காதீங்க... உங்க வீட்டில யாராவது மேலே சொன்ன தப்ப செஞ்சா... நீங்க அவங்களுக்கு அறிவுரை சொல்லி, தேசப்பற்றின் மதிப்பை உணர்த்தனும் செல்லங்களா...!

தேசிய கொடி ஏற்கப்பட்ட நாள் தெரியும்?
கடந்த 1947ம் ஆண்டு ஜூலை 22ம் நாளில்தான், அரசியல் நிர்ணய சபையால் தேசியக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பண்டிட் ஜவகர்லால் நேருவால் ஏற்றப்பட்ட முதல் மூவர்ணக் கொடி உள்ளிட்ட, வரலாற்றின் சில சுவாரஸ்யமான தகவல்களையும் உங்க பெற்றோரிடம் கேட்டு தெரிஞ்சுங்கோ... இதை நான் சொல்ல மாட்டேன்... உங்களுக்கு ஒரு டெஸ்ட்... யாரு எல்லாம் இந்த தகவல்களை தாங்களே தெரிஞ்சுக்குறாங்கனு பார்ப்போம்...!
அவங்க பட்டியல உங்களுக்கு தர்றேன். ஒரு முறையாவது சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த அந்தத் தேசத்தலைவர்களை இந்நாளில் நினைவு கூர்வோம்..!
மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா, கொடிகாத்த குமரன், சுந்தரலிங்கம், வ.உ.சி.சிதம்பரனார், புலித்தேவர், தி.சே.செள.ராஜன், கோவை சுப்ரமணியம் என்கிற சுப்ரி, நீலகண்ட பிரம்மச்சாரி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லப்பாய் படேல், கோபால கிருஷ்ண கோகலே, ஜவகர்லால் நேரு, பால கங்காதர திலகர்
ரெடி ஸ்டார்ட் குட்டீஸ்....! உடனே உங்க அப்பாவோட செல்போன் எடுத்து, உங்க வீட்டில் தேசியக்கொடி ஏற்றி, அதை செல்பி எடுத்து, பதிவிடுங்க.... தேசப்பற்று என்பது ஒரு நாளில் மட்டும் வருவது கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.... விஷ் யூ ஹாப்பி இண்டிபெண்டன்ஸ் டே...!


Click it and Unblock the Notifications












