மோசமான பள்ளிக் கட்டிடங்கள் கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Posted By: Jayanthi

சென்னை, மார்ச் 18: தமிழகத்தில் இடியும் நிலையிலோ அல்லது பழுதான நிலையிலோ உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும் உத்தரவிட்டுள்ளன.

மோசமான பள்ளிக் கட்டிடங்கள் கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் நடந்த பெரும் தீ விபத்துக்கு பிறகு பள்ளிக் கட்டிட விஷயத்தில் தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளையும், விதிகளையும் கொண்டு வந்தது. அரசின் விதிகளுக்கு உட்படாத பள்ளிகள் என சுமார் 1000 பள்ளிகள் கடந்த 2008ம் ஆண்டு தமிழகத்தில் மூடப்பட்டன. குறிப்பாக நர்சரி பள்ளிகள் அதிக அளவில் மூடப்பட்டன. இதையடுத்து, மெட்ரிக் பள்ளிகள் நடத்துவோர் தங்களின் பள்ளி கட்டிடத்துக்கான உறுதிச் சான்று வாங்கினால் தான் அந்த பள்ளியில் அங்கீகாரம் புதுப்பிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. அதனால் பல பள்ளிகள் தங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க முடியாமல் திணறுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் அடிக்கடி அரசுப் பள்ளிகளில் விபத்துகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே ஒரு அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து அப்பள்ளியில் படித்த 5 மாணவ மாணவியர் காயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் முகப்பு வளைவு இடித்து விழுந்ததில் 5ம் வகுப்பில்படித்த மாணவன் அதே இடத்தில் பலியானான். சென்னை பெருங்குடியில் அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் மாணவர்கள் யாரும் காயம் அடையவில்லை.

இது போன்ற தொடர் விபத்துகளால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், இது போன்ற விபத்துகள் அரசுப் பள்ளிகளில் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் சுமார் 53 ஆயிரம் பள்ளிகளில் பராமரிப்பு இல்லாமல் உள்ள கட்டிடங்கள், பழுதான நிலையில் உள்ளவை, இடிந்து விழும் நிலையில் உள்ளவை ஆகியவை குறித்து கணக்கெடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும், வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பள்ளிகள் பராமரிப்பு மற்றும் மறு சீரமைப்புக்காக தனியாக நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

English summary
The school education department has ordered to take a survey of poor school buildings.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia