சென்னை: கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
பள்ளிகள் திறக்கும் இன்றே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்தங்கள், நோட்டுகள் மற்றும் 14 வகை பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இவை இன்றே வழங்கப்படுகின்றனவா, தாமதப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க கல்வித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையும் மேற்கொள்கின்றனர்.
மேலும் தமிழ்நாடு பாடநூல் கழகம் மாவட்டங்களுக்கு அனுப்பிய பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சரியான முறையில் பள்ளிகளுக்கு சேர்க்க பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆகியோரை நேரில் சென்று பார்க்கவும், ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அதிகாரிகளும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்றனர்.

அதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் கடந்த வாரமே சென்றுவிட்டன. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி தங்கு தடையின்றி மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் திறக்கும் அன்றே கிடைக்க ஆவன செய்யும்படியும் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
இன்று மலர்ச்சியுடன் பள்ளி சென்றுள்ள மாணவ மாணவியர், மாலையில் புதுப் புத்தகங்கள், எழுது பொருட்களுடன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பவிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications












