என்ன செய்வீங்களோ தெரியாது.. தேர்ச்சி சதவீதம் 95ஆகக் காட்ட வேண்டும்! - கல்வித் துறை உத்தரவு

Posted By:

சென்னை: பிளஸ் 2 தேர்வில் பல புகார்கள் வந்துள்ளதால் தேர்ச்சி வீதம் 95 சதவீதத்துக்கு பள்ளிக் கல்வித்துறை இலக்கு வைத்து அதன்படி ஆசிரியர்களை விடைத்தாள் திருத்த உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி முடிந்தது. கடந்த மார்ச் 16ம் தேதி முதல் மொழித்தாள் பாடத்துக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. மற்ற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்தடுத்து தொடங்கி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

40 ஆயிரம் ஆசிரியர்கள்

இதற்காக தமிழகம் முழுவதும் 64 விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எச்சரிக்கை-அதிருப்தி

இந்நிலையில், திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கவனக் குறைவாக செயல்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் பாதிக்கப்பட்டாலோ, மறு மதிப்பீட்டில் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றாலோ திருத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் மிகவும் அதிருப்தியில் இந்தபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புகார்கள்

ஆனால் பிளஸ் 2 தேர்வு நடக்கும் போது ஓசூரில் கணக்கு தேர்வு கேள்வித்தாள் வெளியானது, வேதியியல் தேர்வில் சிக்கலான கேள்விகள், விலங்கியல் கேள்வித் தாள் கடினம், வேளாண் செயல்முறைத் தேர்வில் கடினமான கேள்வி, கணக்குப் பதிவியல் தேர்வில் கடினமான கேள்வி, பொருளியல் கேள்வியில் மாற்றம் என பல குழப்பங்களின் அடிப்படையில் மேற்கண்ட புகார்கள் எழுந்தன.

95 சதவீதம்

அவற்றை மறைக்க வேண்டும் என்பதற்காக தேர்ச்சி சதவீதத்தை 95 சதவீதமாக உயர்த்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதை இலக்காக வைத்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

குழப்பம்

ஆனால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மதிப்பெண் எப்படி போடுவது என்று புரியாமல் திணறுகின்றனர். அதிகமாக போட்டால் தான் சதவீதம் உயரும். குறைத்துப் போட்டால் மெமோ கொடுப்பார்கள் என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தி வருகின்றனர். சராசரியாக தேர்வு எழுதி இருந்தாலும் அந்த மாணவர்களுக்கு இப்போது அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்கள் என்றால் அவர்கள் செண்டம் வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

உஷார்

மேற்கண்ட குழப்பங்களால் ஏற்பட்ட கெட்ட பெயர் மறையும் வகையில் இந்த முறை தேர்வு முடிவுகள் இருக்கும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்வுத்துறையில் இயக்குநர் முறைகேடுகள் நடக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தாலும், தேர்ச்சி சதவீதம் சரிந்து விடக்கூடாது என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணி குழப்பமான திசையில் செல்வதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் எப்படியும் 95 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
The Education department has ordered the teachers to keep the pass percentage upto 95 this year for plus two and 10th.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia