தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிய பல மாற்றங்கள் அதிரடி அரசாணை வெளியீடு...!

Posted By:

சென்னை : பிளஸ்1 மற்றும் பிளஸ்2 தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதற்கான அரசாணையை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். அத்துடன் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளார்.

பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து 11ம் வகுப்பிற்கும் 12ம் வகுப்பிற்கும் ஒரே மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டில் இருந்து பிளஸ்1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 11ம் வகுப்புத் தேர்வில் தோல்வி பெறுபவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சிறப்புத் தேர்வு நடத்தப்படும். 12ம் வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டே 11ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை எழுதி தேர்ச்சி பெற புதிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவியர்களுக்கு வருடங்கள் வீணாவது தடுக்கப்படும்.

ஒரே மதிப்பெண் சான்றிதழ்

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இரண்டு வகுப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் மதிப்பெண்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 11ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண்களும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண்களும் வழங்கப்படும். மொத்தமாக 1200 மதிப்பெண்களுக்கு ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வகுப்புகள்

தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களில் தினமும் மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்படும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்படும். நீட் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டங்களில் மாற்றம்

1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு 2018-2019ம் ஆண்டுகளில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
2ம் வகுப்பு, 7ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு 2019-2020ம் ஆண்டுகளில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
3ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு 2020-2021ம் ஆண்டுகளில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.

புதிய பாடத்திட்டத்தில் ஐ.டி கல்வி

இதன்படி பிளஸ்2 பொதுத் தேர்வில் பாடவாரியான மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாடத்தில் ஒரு பகுதியாக ஐ.டி கல்வி கற்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவை இடம் பெறும். மேலும் கணிணி சம்பந்தப்பட்ட ஒரு பாடமும் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டமாக புதிய பாடத்திட்டம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நூலகங்களில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு மாணவ மாணவியர்கள் தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும் புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மொழிப்பாடங்களக்கு 90 மதிப்பெண்ணிற்கு தேர்வும், மற்றப்பாடங்களுக்கு 70 மதிப்பெண்ணிற்கும் தேர்வு நடத்தப்படும். செயல்முறை தேர்வு 20 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஒவ்வொரு பாடங்களிலும் 10 மதிப்பெண் அகமதிப்பீடாக அளிக்கப்படும் என்று வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
The School of Education has issued two regulations today, plus 1 and Plus 2 exam changes and 1 to 12 th of curriculum.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia