விலையில்லா லேப்டாப் எப்போ கிடைக்கும்? ... மாணவர்கள் எதிர்பார்ப்பு ..

Posted By:

சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிந்து ஒரு மாதக்காலம் முடியப்போகிறது. ஆனால் இன்னும் விலையில்லா லேப்டாப் வழங்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசியல் கலவரத்தில் மாணவர்களை கவனிக்க மறந்து விட்டனர் அமைச்சர்கள் என்றும் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

படிக்கும் போதே கம்ப்யூட்டர் பற்றி தெரிந்து கொள்வதற்கும், உயர் கல்வி படிப்பதற்கு வசதியாகவும் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் (மடிக்கணிணி) வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அதன்படி கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது.

மாணவர்களின் குற்றச்சாட்டு

இந்த லேப்டாப் எல்காட் நிறுவன ஏற்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டு (2015-2016) வரை விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால் இந்த கல்வி ஆண்டில் (2016-2017) இதுவரை தமிழ் நாடு முழுவதும் மாணவ மாணவிகள் யாருக்கும் விலையில்லா லேப்டாப் வழங்கப்படவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

லேப்டாப் உயர்கல்விக்கு அவசியம்


லேப்டாப் வழங்க எந்த நடவடிக்கையும் அரசோ, பள்ளிக்கல்வித்துறையோ எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். லேட்பாப் உயர்கல்விப் படிப்பிற்கு தேவையான ஒன்று. ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் எங்களைப் போன்ற ஏழை மாணவர்களால் பணம் கொடுத்து லேப்டாப்பை வாங்க முடியாது. எங்களுடைய பெற்றோர்களுக்கும் லேப்டாப்பை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு வசதி வாய்ப்பு இல்லை. எனவே இதனால் எங்களுடைய உயர்கல்வி பாதிக்கப்படும் என்று அரசு பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

விலைஇல்லா காலணிகள் மற்றும் புத்தகப்பைகளும் இன்னும் வழங்கப்படவில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ மாணவர்களுக்கு விலைஇல்லா லேப்டாப் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அது எங்கள் உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என பள்ளி மாணவ மாணவியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் ஆதங்கம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களில் வெளிவர உள்ளது. பின்னர் மாணவ மாணவியர்கள் கல்லூரியில் சேருவதில் பிஸியாகி விடுவார்கள். அதற்கு முன்னதாக அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு விலையில்லா லேட்டாப்பை விரைவில் வழங்கி அவர்கள் உயர்கல்விக்கு உதவிட முன் வரவேண்டும் என்று மாணவர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதா மறைந்து விட்டதால் இந்த திட்டங்களும் மறைந்து விட்டதா? என்று மாணவ மாணவியர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

English summary
Free laptop is not yet offered, the accusation of the students. The Government of Tamil Nadu must come up with a free laptop for government school students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia