உயர் கல்வி நிறுவனங்களில் திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை தேதியினை நீட்டித்து பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் வந்த நிலையில், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டது.
குறிப்பாக, இந்த வழிகாட்டுதலில் தொலைநிலைக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்ளிட்டு 10 உயர் கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொலைநிலைப் படிப்புகள் மட்டுமே தகுதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள தகுதிபெற்ற கல்வி நிறுவனங்கள் திறந்தநிலை, தொலைநிலைப் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என யுஜிசி ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்போது, இந்த கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும், கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளில் வரும் 31-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












