மாணவர்களை வேலை வாங்கினால் ஆசிரியர் மீது நடவடிக்கை - தொடக்க கல்வித்துறை உத்தரவு

Posted By: Jayanthi

சென்னை, மார்ச் 4: பள்ளிகள் தொடர்பான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்றில்லாமல் பெரும்பாலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் வகுப்பு ஆசிரியர்களால் தண்டிக்கப்படும் நிலை இன்றும் தொடர்கிறது. தனியார் பள்ளிகளை பொருத்தவரை கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை பள்ளிகளில் வரம்பு மீறும் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்கின்றனர். இது மாணவர்கள் மனநிலையை பாதிப்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களை வேலை வாங்கினால் ஆசிரியர் மீது நடவடிக்கை - தொடக்க கல்வித்துறை உத்தரவு

இதனால் மாணவர்களை தண்டிக்கின்ற நிலைக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் பெண் குழந்தைகளிடம் பாலியல் குறும்பு செய்வது, மாணவியரை தவறாக பேசுவது என்று ஆசிரியர்கள் மீது பழி சுமத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், தங்கள் வகுப்பில் படிக்கும் மாணவர்களை தங்கள் சொந்த வேலைகளை செய்யச் சொல்வது, பள்ளியின் பணியில் ஈடுபடுத்துவதும் உண்டு. குறிப்பாக பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்யச் சொல்வதும் உண்டு. இது போன்ற பிரச்னைகள் தலைதூக்கும் போது சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் 2 மாணவர்களை வகுப்பறைக்குள் வைத்து ஆசிரியர் பூட்டிவிட்டதால் மாணவர்கள் போட்டனர். பின்னர் ஆசிரியர்கள் அறைக் கதவை திறந்துவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில் பள்ளி முடிந்த பிறகு வகுப்பறைகளை மாணவர்கள் பூட்டுப் போடுகின்றனர் என்ற விவரம் தெரியவந்தது. அதேபோல சில பள்ளிகளில் பள்ளியின் கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யச் சொல்வதும், குடிநீர் கொண்டுவந்து வைக்கச் சொல்வதும் தெரிய வந்துள்ளது.

இது போன்ற பிரச்னைகள் தொடக்க கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து, தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அந்தந்த பள்ளிகளில் உள்ள பணிகளை ஆசிரியர்கள் அல்லது உரிய ஊழியர்கள் தான் செய்ய வேண்டும். பள்ளிப் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தினால் அந்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார். இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

English summary
The primary education department of the state has announced that engaging students in teachers personal work in houses is punishable one.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia