தேர்வுக் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உட்காரக் கூடாது: தேர்வுத் துறை அதிரடி

Posted By:

சென்னை, மார்ச் 2: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடக்கும் போது தேர்வு அறையில் கண்காணிப்பாளர்கள் அமர இருக்கைகள் போடக் கூடாது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேர்வுக் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உட்காரக் கூடாது: தேர்வுத் துறை அதிரடி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு 5ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து அனைத்து தேர்வுப் பணிகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. தேர்வில் குழப்பம் மற்றும் குளறுபடிகள் நடக்காமல் இருக்கவும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைளை தேர்வுத் துறை எடுத்து வருகிறது.

அதன்படி, தேர்வு அறைகளில் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் இருக்கையில் அமர்ந்து பணியாற்றும் வசதிகள் இல்லை என்று தேர்வுத் துறை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதனால் தேர்வு அறையில் கண்காணிப்பாளர் அமர இருக்கை இருக்காது.

மேலும், தேர்வு நடத்தும் நடைமுறைகள் குறித்தும் தேர்வுத்துறை அனைத்து தேர்வு மையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்வு தொடங்கும் முதல் 10 நிமிடங்கள் கேள்வித்தாளை மாணவர்கள் படித்துப் பார்க்க ஒதுக்க வேண்டும். அடுத்த 5 நிமிடங்கள் மாணவர்கள் தேர்வு எண்கள் உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பாளர் சரிபார்க்கலாம். பின்னர் 10.15 மணிக்கு மாணவர்கள் விடை எழுதத் தொடங்கி மதியம் 1.15க்கு முடிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சாதகமாக தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்ளக் கூடாது. அதாவது மாணவர்கள் துண்டுச் சீட்டுகளைப் பார்த்து எழுத உதவக் கூடாது. அதற்காக அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு நடக்கும் அறையில் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

அவர்கள் அங்கு அமர்ந்து பணியாற்றும் வகையில் இருக்கைகள் போடக்கூடாது. தேர்வு எழுதும் மாணவர்களிடமோ அருகில் உள்ள தேர்வுக் கண்காணிப்பாளரிடமோ அவர்கள் பேசக் கூடாது.

மொபைல் போன் உள்ளிட்ட எந்த சாதனங்களையும் எடுத்து செல்லக்கூடாது. அவற்றை தலைமை ஆசிரியர் அறையில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்ல வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

English summary
The examination department has ordered the invigilators not to sit inside the exam halls.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia