மாணவர்களே.. இவை வெறும் தேர்வுகளே.. இயல்பாக எதிர்கொள்ளுங்கள்!

Posted By:

சென்னை புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கணக்குப் பரீட்சைக்குப் பயந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக இன்று செய்தி.

மாணவர்களே.. இவை வெறும் தேர்வுகளே.. இயல்பாக எதிர்கொள்ளுங்கள்!

படிக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் பதற வைக்கும் செய்தி இது.

முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணத்தில்தான் இந்த மாதிரி தற்கொலைச் செய்திகள் இடம்பெறும். இன்று தேர்வு நடக்கும்போதே இம்மாதிரி தற்கொலைகள் நடப்பது, மாணவர்கள் மீது அதிகரித்து வரும் நெருக்கடிகளையே காட்டுகிறது.

'பனிரெண்டாம், பத்தாம் வகுப்புகளுக்கு நடக்கும் அரசுத் தேர்வு மற்றுமொரு தேர்வுதான்.. பயம் கொள்ள வேண்டாம்' என அவர்களைத் தயார்ப்படுத்துவது, பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. அதைவிட்டுவிட்டு, 'இந்த எக்ஸாம்ல கோட்டை விட்ட, வாழ்க்கையே போச்சு' என்கிற ரீதியில் பயமுறுத்துவது மாணவர்களுக்கு எந்த வகையிலும் நன்மை தராது.

பள்ளியில், வீட்டில், ட்யூஷனில் எந்நேரமும் படித்துக் கொண்டே இருக்கும் மாணவ மாணவிகள், அதை எப்படி தேர்வில் பதட்டமில்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுத் தரத் தவறிவிடுகிறார்கள்.

முன்புதான் மார்ச் தேர்வில் கோட்டை விட்டால், குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும். இப்போது அந்த கஷ்டம் கூட இல்லை. அடுத்த இரு மாதங்களில் மீண்டும் தேர்வெழுதிக் கொள்ளலாம். தேர்ச்சி பெறத் தவறியவர்கள் தேறலாம்.. குறைந்த மதிப்பெண் வாங்கியவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ளலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருப்பதால், வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை... தேர்வுகளையும் மதிப்பெண்களையும்விட உயிர் வாழ்வது மிக முக்கியமானது என்பதை, தேர்வுக்குப் போகும் ஒவ்வொரு மாணவரையும் உணர வைப்பது ஆசிரியர்கள், பெற்றோரின் இன்றியமையாத கடமை.

மாணவர்களே... இவை வெறும் தேர்வுகள்தான். வாழ்க்கை இதைவிடப் பெரிது.

English summary
Some of the students committed suicide in recent days due to the fear of facing public examinations. This is an appeal to all the students to face the exams with ease.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia