கார் டிரைவரின் மகள் இன்று கலெக்டர்: சாதித்த வான்மதி!

Posted By:

சென்னை: கார் டிரைவரின் மகள் இன்று இந்திய சிவில் சர்வீஸஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். 2014-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய சிவில் சர்வீஸஸ் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேற்று வெளியிட்டது. இந்தத் தேர்வில் தமிழகத்திலிருந்து 118 பேர் உள்பட மொத்தம் 1,236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதி 152-ஆவது இடத்தில் வெற்றி பெற்றார். வெற்றி குறித்து தொடர்பாக சி.வான்மதி கூறியது:

 கார் டிரைவரின் மகள் இன்று கலெக்டர்: சாதித்த வான்மதி!

எனது தந்தை சிறிய நிறுவனத்தில் கார் டிரைவாகப் பணிபுரிந்து வந்தார். நான் படிக்கும்போது எங்களுக்கு குடிசை வீடுதான் இருந்தது. அந்த நிலையிலிருந்து குடும்ப நிலையை மாற்ற வேண்டுமானால் கல்வியால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையுடன் படித்தேன். அதற்காக அயராது உழைத்தேன். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அரசு பள்ளியில்தான் எனது திறமையை வளர்த்துக் கொண்டேன்.

பி.எஸ்சி. கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும், பகுதிநேரமாக எம்.சி.ஏ.வும் முடித்தேன். 2010-ஆம் ஆண்டிலிருந்து குடிமைப்பணித் தேர்வு எழுதி வருகிறேன். முதல் முயற்சியில் நேர்முகத் தேர்வில் வெற்றி கை நழுவியது. இப்போது 4-வது முயற்சியில் வெற்றிக் கனியை ருசித்துவிட்டேன்.

மாணவர்களும், இளைஞர்களும் தங்களது இலக்கை தெளிவாக நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

மக்களுக்கான சேவைகளை விரைந்து கிடைக்கச் செய்வதே எனது நோக்கம். குறிப்பாக, அரசு சேவைகளை டிஜிட்டல்மயமாக்குவதில் கவனம் செலுத்துவேன். கார் டிரைவராக இருந்தபோது என்னை வெற்றி பெறச் செய்தது எனது தந்தைதான் என்றார்.

இப்போது ஈரோடு மாவட்டம், நம்பியூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி மேலாளராக இவர் இருக்கிறார். இவரது தந்தை சென்னியப்பன், தாய் சுப்புலட்சுமி.

இவர் சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக செய்தி கிடைத்தபோது மருத்துவமனையில் தந்தையுடன் இருந்தார் வான்மதி. சிகிச்சைக்காக கோவை மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர்கள் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.அருண்ராஜ் 34-ஆவது இடத்தையும், டி.எஸ்.விவேகானந்த் 39-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

English summary
C Vanmathi was at her father's hospital bedside in Coimbatore when news of her success arrived on Saturday. Her father, T N Chenniyappan, sustained a spinal injury two days after Vanmathi had finished the interview round. But he was beaming when he heard that his daughter secured the 152nd rank in the UPSC exam.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia