தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்துள்ளது.

இந்நிலையில், 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் பள்ளிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்வி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முழுமையாக முடக்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான ஆன்லைன் வழியில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டது.
தேர்வுகள் ரத்து
மேலும், கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து தேர்வு எழுத முடியாத சூழல் தொடர்ந்து நீடித்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. அதோடு இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களைத் தவிர இதர மாணவர்கள், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்றும் அரசு அறிவித்தது.
ஊரடங்கில் தளர்வுகள்
தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதங்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினர்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
ஊரடங்கு தளர்வின் படி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதர வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா
இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையாக மீண்டும் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இத்தொற்று அதிகளவில் பரவி வருவதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் சமீபத்தில் 6 ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அப்பள்ளி மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. பள்ளிகளே இந்நோய் பரவ முக்கிய காரணமாக உள்ளது என பலரும் குற்றம் சாட்டினர்.
தமிழக பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை
இந்நிலையில் 12-ஆம் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும், 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிகளுக்கு வரவேண்டாம் என உத்தரவிட வேண்டும் என கல்வியாளர்கள் கூறிவந்தனர்.
தமிழக அரசு அதிரடி
தற்போது தமிழக அரசு இந்த விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வர வேண்டாம் என அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் இந்த உத்தரவு தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் ஊரடங்கு?
இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றும் வெளியாக நிலையில் பெரும்பாலானோர் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.


Click it and Unblock the Notifications












