கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஓராண்டைக் கடந்த நிலையில் சமீபத்தில் நிலைமை சற்று சீரடைந்து மக்கள் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளனர். நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது.
தேர்வுகள் ரத்து
கடந்த ஆண்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பொதுத் தேர்வுகள் மட்டும் காலம் தாழ்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.
மீண்டும் அதிகரித்த கொரொனா
இதனிடையே, கடந்த சில வாரங்களாகத் தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் தினமும் 850க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
உருமாறிய கொரோனா
மேலும், தற்போது வேகமெடுத்து வரும் கொரோனா பரவல் உருமாறிய கொரோனா வைரஸ் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னதாக பரவிய கொரோனா வைரசிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த உருமாறிய கொரோனா குறித்தும், அதற்கான தடுப்பு மருந்து குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இரண்டாவது அலை
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகியிருக்கிறதா என்ற அச்சம் ஆட்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முக்கிய காரணங்கள்
தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பொதுக் கூட்டம், பிரச்சாரம் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். அவ்வாறு வரும் மக்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியமான முகக் கவசம் அணிவதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளிலும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளிகளில் அதிகரித்த கொரோனா
மேலும், பள்ளிகளிலும் அடுத்தடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பள்ளிகளுக்கு மட்டும் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் ஊரடங்கு அமல்
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் பாண்டியராஜன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்தால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

