உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரசுக்கு தற்போது வரையில் 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 7.16 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,332 ஆக உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகளின் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட தகவலைத் தமிழ்நாடு சுகாதாரத்துறை, செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ஒரே நாளில் 121 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், தமிழ்நாட்டில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2,058ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் திறக்கப்படும் அலுவலகங்களில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருந்தால் மீண்டும், அந்த அலுவலகம் மூடப்படுமா? பணியாளர்களின் நிலைமை என்னவாகும் என பணியாளர்களிடையே குழப்பம் நீடித்து வந்தது.
தற்போது, அவ்வாறு ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் திறக்கப்படும் அலுவலகங்களில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருந்தால் அந்த அலுவலகம் முற்றிலுமாக சீல் வைக்கப்படமாட்டாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஊரடங்கு முடிந்து திறக்கப்பட்ட அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் இருந்தால் அந்த அலுவலக வளாகம் சீல் வைக்கப்படவோ, அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவோ அறிவிக்கப்பட மாட்டது என தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாகச் சம்பந்தப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டு அவர் பணியாற்றும் பகுதி கிருமி நாசினி தெளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அதிகாரிகளின் ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்படும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.