பலமுறை பொதுத் தேர்வு எழுதுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் - தமிழக அரசு புதிய உத்தரவு!

Posted By:

சென்னை: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பல முறை முயற்சி செய்து அந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர். இதைத் தொடர்ந்து உயர் வகுப்புகளுக்குச் செல்லும் போது பல மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் இணைக்க வேண்டிய நிலை உள்ளது. அதைத் தவிர்க்கும் பொருட்டு அவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையின் செயலர் டி.சபிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச்-ஏப்ரல், ஜூன்-ஜூலை, செப்டம்பர்-அக்டோபர் ஆகிய மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் தேர்வு எழுதுபவர்களில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் பேர் மட்டுமே ஒரே முறையில் தேர்ச்சி பெறுகின்றனர். மீதமுள்ளோர் வெவ்வேறு பருவங்களில் தேர்வு எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால், அவர்கள் 2-க்கு மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இவர்கள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழைக் கோரி வருகின்றனர்.

நிரந்தரப் பதிவெண் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடியும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.

இனி பொதுத்தேர்வுகளை 1-க்கும் மேற்பட்ட பருவங்களில் எழுதி தேர்ச்சி பெறும்போது, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அதோடு, தேர்வர்கள் தங்களது இறுதி முயற்சியில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியடைந்தால், அந்தப் பருவத்துக்குரிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாது. அப்போது வெவ்வேறு பருவங்களில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களை ஒன்றாகத் தொகுத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Government has ordered to distribute Combined Mark sheets for the 10, 12th students who have passed out the exams in various attempts. The Government has released a Gazette on this regard.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia