கொரோனா தொற்றினால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் கல்லூரி பருவத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வையும் ஆன்லைன் வழியிலேயே நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2020 மார்ச் இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இருப்பினும், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்காதவாறு ஆன்லைன் வழியிலேயே வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டது.
மீண்டும் திறக்கப்பட்ட கல்வி நிலையம்
தொடர்ந்து, கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 75 சதவிகிதம் ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
பருவத் தேர்வுகள் அறிவிப்பு
இந்த நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இத்தேர்வு நேரடியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அதிர்ச்சி
ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்திவிட்டு நேரடியாக தேர்வை எழுத வேண்டும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாணவர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவிட்டு தற்போது நேரடியாக தேர்வு நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
குறிப்பாக, மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் தமிழக அரசு மற்றும் கல்லூரியின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, அக்கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தீயாய் பரவிய போராட்டம்
மதுரை மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடியாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Click it and Unblock the Notifications












