வேளாண் பல்கலைக்கழக பொது கலந்தாய்வு ஜூன் 19ந் தேதி ஆரம்பம்..! தரவரிசை பட்டியல் வெளியீடு

Posted By:

கோவை : கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் இளம் தொழில் நுட்பவியல், உயிர் தகவலியல் உள்பட 13 வேளாண் பட்டப்படிப்புகள் உள்ளன.

இந்த படிப்பில் சேருவதற்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

மொத்தம் உள்ள 2,860 காலி இடங்களில் சேர 57 ஆயிரத்து 47 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் மாணவர்கள் 21 ஆயிரத்து 15 பேர், மாணவிகள் 28 ஆயிரத்து 14 பேர், ஒரு திருநங்கை உள்பட மொத்தம் 49 ஆயிரத்து 30 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தரவரிசை பட்டியல் வெளியீடு

பரிசீலனைக்கு பிறகு இந்த ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் மதிப்பெண் தரவரிசை பட்டியலை ஜூன் 10ந் தேதி சனிக்கிழமை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி வெளியிட்டார். இதில் முதல் இடத்தை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆர். கிருத்திகா, கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த கீர்த்தனாராவி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஷோபிலா, சவுமியா, சாக்ஷினி, ஆர்த்தி ஆகிய 6 மாணவிகள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற சாதனை படைத்தனர்.

திருநங்கை ராஜேஷ் தேர்வு

மேலும் 199 கட் ஆப் மதிப்பெண்களை 100 பேரும், 198.5 கட் ஆப் மதிப்பெண்களை 200 பேரும், 198.25 கட் ஆப் மதிப்பெண்களை 300 பேரும், 194 கட் ஆப் மதிப்பெண்களை 3000 பேரும் பெற்றிருந்தனர். இதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ் என்ற திருநங்கையும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு கலந்தாய்வு ஜூன் 16ந் தேதி ஆரம்பம்

இந்த கல்வியாண்டில் புதிதாக குடியாத்தம், திருவண்ணாமலை ஆகிய பகுதியில் மேலும் 2 வேளாண் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது. சிறப்பு இடஒதுக்கீடுக்கான கலந்தாய்வு வருகிற 16ந் தேதியும், பொது கலந்தாய்வு 19ந் தேதியும் தொடங்குகிறது.

புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்

வேளாண் படிப்புகளுக்கு இந்த வருடம் அதிக அளவில் மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். பெண்களுக்கு உகந்த துறை என்பதாலும் வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதாலும் மாணவிகள் அதிக அளவில் விண்ணப்பித்திருந்தனர். புதிதாக தொடங்கப்படும் கல்லூரிகள் மூலம் மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி கூறினார்.

English summary
Covai Tamil Nadu Agricultural University has 14 academic & 21 affiliated colleges in the field of agriculture,horticulture, forestry,13 agriculture degrees

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia