கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் அவை மீண்டும் எப்போது திறக்கப்படும் என பல்வேறு எதிர்பார்ப்புகளும், குழப்பங்களும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், நவம்பர் 16 தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த உத்தரவு குறித்து தமிழக முதலமைச்சர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
மூடப்பட்ட பள்ளிகள்
நாடு முழுவதும் பரவிய கொரோனா நோயினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதியன்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வழியில் தற்போது வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிகளைத் திறக்க உத்தரவு
கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கவும் மாநில, ஒன்றிய பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளைத் திறந்த மாநில அரசுகள்
மத்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து பல்வேறு மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளைத் திறந்து வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், தமிழக அரசு தொடர்ந்து பள்ளிகளைத் திறப்பதில் காலதாமதம் செய்து வருகிறது.
தமிழக அரசு அதிரடி
இதனிடையே, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிக் கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகளவிலிருந்ததால் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, நவம்பர் 16ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் திறக்கப்படும் பள்ளிகள்
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் ஊரடங்கு வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
கேள்விக்குறியாகும் மாணவர்கள் நலன்
தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளைத் திறப்பதில் மூலம் தமிழகத்தில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கொரோனா பாதிப்பு கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா தொற்று
மேலும், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதோடு, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட பகுதிகள் ஏற்கனவே திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், ஜனவரி இறுதியில் ஆய்வு செய்து பள்ளிகளைத் திறக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த அறிக்கை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்து பரிசீலிக்கப்படும் என்று கூறியிருப்பதால் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்பு பின்வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ஆலோசனை
இதனிடையே, இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த வல்லுநர்களுடன் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
பள்ளி திறப்பில் முக்கிய அறிவிப்பு
பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சருடனான ஆலோசனையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கேபி அன்பழகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












