பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் ? பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்டவை தொடர்பான வழிமுறைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் பள்ளி மாணவர்கள் குறைந்த பட்சமாக 6.2 கிலோ முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடை வரையில் புத்தகப் பையை சுமந்து செல்வதாகவும், அவர்களின் உடல் எடையில் 30 முதல் 35 சதவிகிதம் புத்தகப் பையாக சுமப்பதாகவும் fடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்படி புத்தகப்பையை சுமந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உடல் ரீதியாகவும், மனநிலையிலும் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் கூடுதல் பாடப்பிரிவு மற்றும் புத்தகப்பை எடை தொடர்பான அறிவுறுத்தலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அவற்றில், 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களைத் தவிர வேறு எதையும் எழுத சொல்லக் கூடாது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப் பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களைக் கூடுதல் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை எடுத்து வர சொல்லக்கூடாது. 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை ஒன்றரை கிலோ, 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தகப்பை எடை 2 முதல் 3 கிலோ, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 4 கிலோ, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை எடை நான்கரை கிலோ, 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை எடை 5 கிலோவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












