தமிழக கல்வித் துறையில் சிஇஓ, டிஇஓ இடங்கள் காலி!!

Posted By:

சென்னை: தமிழகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும் காலியாகவுள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என தலைமையாசிரியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

நாகப்பட்டினம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 10 இடங்கள் காலியாக உள்ளன.

அதேபோல, மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான 125 பணியிடங்களில் 65-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இந்த நிலைமை பல மாதங்களாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதேபோல திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள், திருச்சி, லால்குடி, அறந்தாங்கி, தூத்துக்குடி, பொன்னேரி, செங்கல்பட்டு, பரமக்குடி ஆகிய இடங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், கோவை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் உள்பட 65 பணியிடங்கள் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் ஜூலை 31-ஆம் தேதி மாவட்ட அளவில் மேலும் சில கல்வி அலுவலர்கள் ஓய்வு பெறவுள்ளனர். எனவே, கற்றல், கற்பித்தல் மேற்பார்வைப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் 600-க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பணியிடங்கள் காலியாகவே இருப்பதால் பல்வேறு பணிகள் பாதிப்புள்ளாகியிருக்கின்றன என்றும், ஆசிரியர்கள் தரப்பு கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லையென்றும் தலைமை ஆசிரியர்கள் குமுறி வருகின்றனர்.
இது முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
CEO, DEO posts in School Education are vacant for the past 6 months. School Headmasters association urged the government to fill the DEO, CEO posts soon.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia