கொரோனா பொது ஊரடங்கின் காரணமாக பள்ளிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது மத்திய பல்கலைக் கழகத்தின் அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன.
குறிப்பாக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திருவாரூரை அடுத்த நீலக்குடியில் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகம் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ளது. அதோடு, அப்பல்கலைக்கழக மாணவர் விடுதி, கொரோனா சிகிச்சை மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
இவற்றின் காரணமாக, பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை நீடித்துவந்தது. இதனிடையே, இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் வழியில் தேர்வுகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ஆன்லைன் தேர்வுகள் உள்ளிட்டு ஆண்டு பருவத் தேர்வுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தற்போது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும், இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்தைய பருவத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












