இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான மசோதாவை தற்போது நிறைவேற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, 1 முதல் 8-ம் வகுப்புவரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில வருடங்களாகக் கூறி வந்தது.
இதுகுறித்தான அறிவிப்பையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். இருப்பினும், இந்த நடைமுறையால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கருத்து தெரிவித்திருந்தன.
குறிப்பாக, இலவச மற்றும் கட்டாயக் கல்வியினை நடைமுறையில் கொண்டுள்ள தமிழகம், இந்த புதிய மாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது எனவும், 8-ஆம் வகுப்பு வரையில் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் கூறிவந்தது.
இருப்பினும், மத்திய பாஜக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 8-ஆம் வகுப்பு வரையில் தோல்வியடையச் செய்யாமல் தேர்ச்சி பெறச் செய்வதினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. அதனால், 8ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 11ம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது. 2009-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு வைக்க வேண்டும் என மத்திய அரசு தனது அரசிதழில் அறிவித்துள்ளது.
அந்த அரசிதழில் "5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்வில் மாணவர்கள் தோல்வியடைந்தால் அடுத்த இரண்டு மாதங்களிலேயே மீண்டும் வரும் தேர்வில் பங்கேற்றுத் தோல்வியடைந்த பாடங்களை எழுதிக் கொள்ளலாம். அந்தத் தேர்விலும் மாணவர் தோல்வியடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடைமுறையினை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்:
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள இத்திட்டமானது அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் பின்பற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த சில காலமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு ஏற்காது எனவும், 8-ஆம் வகுப்பு வரையில் தேர்ச்சி கட்டாயம் எனவும் அறிவித்து வந்தார். இந்நிலையில், தமிழக அரசு இந்த புதிய திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த உள்ளது என பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.