சிபிஎஸ்இ கணக்கு தேர்வு கேள்வித்தாள் விவகாரம்: பிரச்னைக்கு முடிவு கட்ட சிபிஎஸ்இ அவசர ஆலோசனை

Posted By:

சென்னை: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணக்கு கேள்வித்தாள் பிரச்னை பெரிதாகி வருவதால் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்களை அழைத்து பேசி வருகிறது.

கடந்த 2ம் தேதி முதல் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு நடந்தது வருகிறது. அதில் நேற்று முன்தினம் கணக்கு பாடத் தேர்வு நடந்தது. அதில் வழங்கப்பட்ட கேள்வித்தாளை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்சிஇஆர்டி வெளியிட்ட மாதிரி கேள்வித்தாள் வடிவமைப்பில் இருந்து அந்த கேள்வித்தாள் வேறுபட்டு இருந்தது.

சிபிஎஸ்இ கணக்கு தேர்வு கேள்வித்தாள் விவகாரம்: பிரச்னைக்கு முடிவு கட்ட சிபிஎஸ்இ அவசர ஆலோசனை

இதனால் மாணவர்கள் கணக்கு கேள்விகளுக்கு விடை அளிக்க முடியாமல் திணறினர். கேள்வித்தாள் கடினமாக இருந்ததால் 100 மதிப்பெண் எடுப்பது சிரமம் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். இந்த கேள்வித்தாள் குறித்து பாட ஆசிரியர்கள் ஆய்வு செய்ததில் வழக்கமாக இடம் பெறும் முறையில் இல்லாமல் தற்போதைய கேள்வித்தாள் மாறுப்பட்டு இருந்ததை ஆசிரியர்களும் ஏற்றுக் கொண்டனர். சில கேள்விகள் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது குறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர் ஒருவர் கறுகையில், கடந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ தேர்வு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். அதாவது பொதுத் தேர்வில் இடம் பெறும் கேள்விகளில் சில கேள்விகள் மாணவர்களின் சிந்தனையை அடிப்படையாக கொண்டு இருக்கும். அந்த வகை கேள்விகளுக்கு மாணவர்கள் பாடப்புத்தகத்தில் இருந்து தாங்கள் படித்து தெரிந்து கொண்டதை அடிப்படையாக வைத்து தாங்களே சிந்தித்து எழுதும் வகையில் இருக்கும். மற்றொரு வகை கேள்வி பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களில் இருந்து கேட்கப்படாமல் வெளியில் இருந்து கேட்கப்படும். இந்த முறை குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ மத்திய அலுவலகம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. ஆனால் பல பள்ளிகளில் அது குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும், இந்த புதிய முறையின் கீழ் பாடங்களையும் நடத்தவில்லை. அதனால் தான் மாணவர்களுக்கு இந்த ஆண்டு கணக்கு தேர்வு கடினமாக இருந்துள்ளது என்றார்.

ஆனால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கேள்வித்தாள் வடிவமைப்பு குறித்து வெளிப்படையாக தெரிவிக்காமல் விட்டதால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டது என்று பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து இந்த பிரச்னை மேலும் பெரிதாக வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக சில முக்கிய சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்த முதல்வர்களை மத்திய அலுவலகம் அழைத்து ஆலோசித்து வருகிறது. நன்றாக படிக்கும் மாணவர்கள் கணக்கு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு இருந்தாலும், சராசரி மாணவர்கள் கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் சிபிஎஸ்இ ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், இந்த கணக்கு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் அடிப்படையில் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

English summary
The CBSE board has called for a urgent meet to solve the maths question paper issue.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia