கொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கல்வி ஆண்டிற்கான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவிகிதத்தை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீடித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த கல்வி ஆண்டில் நடைபெறவிருந்த பொதுத்தேர்வுகளும் பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து எவ்வித முடிவுகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்காத நிலையில், தற்போது பல பள்ளிகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவிகிதம் வரை பாடங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, குடியுரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட முக்கிய பாடங்களை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அரசியல் அறிவியல் பாடத்திலிருந்து இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கட்டமைப்பு என்ற அத்தியாயமும், பொருளாதாரப் பாடத்திலிருந்து உணவு பாதுகாப்பு தொடர்பான அத்தியாயமும் நீக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் பாடத்தில் ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, சாதி, மதம் மற்றும் பாலினம், ஜனநாயக அமைப்பின் சவால்கள் உள்ளிட்ட பகுதிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி, சிபிஎஸ்இ 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி உள்ளிட்ட சில முக்கியமான அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும், பாடத்திட்டத்தின் துணைப்பிரிவுகளாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி உள்ளிட்ட அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.
அதேப்போல, 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் அரசியல் அறிவியல் பாடத்திலிருந்து தற்கால உலகில் பாதுகாப்பு, இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் உள்ளிட்ட முக்கிய பொது அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலைப் பயன்படுத்தி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய பாடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.