சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மறுகூட்டலில் குளறுபடி.... மாணவ மாணவிகள் அதிர்ச்சி..!

Posted By:

சென்னை : மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திய 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், கடந்த மாதம் வெளியாகின. அதில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒன்றிரண்டு பாடங்களில் மிகக்குறைவான மதிப்பெண்களே கிடைத்தன. இதனால், அவர்கள் சந்தேகம் அடைந்து மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர்.

அதில் அவர்களது சந்தேகத்தை நிரூபிக்கும் வகையில் அதிகமான மதிப்பெண்கள் கிடைத்தன. முதலில் பெற்ற மதிப்பெண்ணுக்கு மறுகூட்டலில் கிடைத்த மதிப்பெண்ணுக்கும் இடையே 400 சதவீதம் வரை வேறுபாடு இருப்பது தெரியவந்தது. அந்த அளவுக்கு மதிப்பெண்ணை கூட்டுவதில் பெரும் குளறுபடி நடந்திருப்பதை அறிந்து மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உதாரணமாக, டெல்லியைச் சேர்ந்த சோனாலி என்ற மாணவி, பொருளாதாரத்தில் 99 மதிப்பெண்ணும், அக்கவுண்டன்சியில் 95 மதிப்பெண்ணும், பிசினஸ் ஸ்டடியில் 96 மதிப்பெண்ணும் பெற்றிருந்தும் கணிதத்தில் 68 மதிப்பெண்தான் பெற்றருந்தார். அவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். மறுகூட்டலில் அவருக்கு கணிதத்தில் 95 மதிப்பெண் கிடைத்தது. அதாவது 27 மதிப்பெண்கள் அதிகமாக கிடைத்தது.

மறுகூட்டலில் இரண்டு மடங்கு மார்க்

இதுபோல் சமிக்ஷா சர்மா என்ற மாணவி, மற்ற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், கணிதத்தில் 42 மதிப்பெண்தான் பெற்றிருந்தார். இதனால், டெல்லியில் ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் அவரால் சேர முடியாத நிலை ஏற்பட்டது. மறு கூட்டலில் அவருக்கு கணிதத்தில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக, அதாவது 90 மதிப்பெண் கிடைத்தது.

தோல்வியடைந்த மாணவர் மறுகூட்டலில் தேர்ச்சி

இதபோல் கணிதத்தில் 50 மதிப்பெண் பெற்றிருந்த மும்பையைச் சேர்ந்த முகமது அப்பன் என்ற மாணவருக்கு மறுகூட்டலில் 90 மதிப்பெண் கிடைத்தது. பொருளாதாரத்தில் வெறும் 9 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததாக கருதப்பட்ட ஒரு மாணவர், 45 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர்கள் மட்டுமின்றி, ஏராளமான மாணவ மாணிவகளுக்கு மதிப்பெண் கூட்டலில் குளறுபடி நடந்துள்ளது.

சிபிஎஸ்இ உயர் அதிகாரி விளக்கம்

இதுபற்றி கேட்ட போது, எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மறுகூட்டலுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. மதிப்பெண்ணை கூட்டும் போது தவறு நடந்திருக்கலாம் ஒவ்வொரு பக்கத்திலும் போடப்பட்ட மதிப்பெண்ணை விடைத்தாளின் முதல் பக்கத்தில் மொத்தமாக கூட்டிய போது தவறு நடந்திருக்கலாம். விடைத்தாள் இணைப்பு பக்கங்களில் போடப்பட்ட மதிப்பெண்களை கூட்டாமல் விட்டிருக்கலாம். இது போன்ற காரணங்களால் தவறு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என சிபிஎஸ்இ தேர்வு பிரிவைச் சோர்ந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மறுகூட்டலில் நடந்த தவறுகள்

மறுகூட்டலுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்த போதிலும், கணிசமானோர் இதனால் எந்த பலனும் கிடைக்காது என்ற எண்ணத்தாலோ அல்லது அச்சம் காரணமாகவோ விண்ணப்பிக்காமல் இருந்து விட்டனர். இதனால் அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மறுகூட்டலுக்கு சிபிஎஸ்இ அனுமதித்த போதிலும், விடைத்தாளை மறுதிருத்தம் செய்வதற்கு அனுமதிப்பது இல்லை. கோர்ட்டு உத்தரவு இருந்தால் மட்டுமே மறுதிருத்தம் செய்ய அனுமதிக்கும். இருபபினும், மறுகூட்டலில் நடந்துள்ள தவறுகளை தொடர்ந்து, மறுதிருத்தத்தை அனுமதிக்க வேண்டும் என்று மாணவர்களும் தனியார் பள்ளிகளின் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

English summary
Above mentioned article about cbse 12th mark sheet Recalculate confusion.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia