அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்?

Posted By:

சென்னை : அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் அவர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்?

நலத்திட்டங்கள் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான். இதை முன்னிலைப்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. அப்போதுதான் நலத்திட்டங்கள் அதிகஅளவில் மாணவ மாணவியர்களை சென்றைடையும்.

கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கலந்தாலோசனை செய்ய வேண்டும். அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துண்டுப் பிரசுரங்கள்

மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் மற்றும் கல்வியின் தரத்தை பற்றி எடுத்துரைக்க வேண்டும்.

விலையில்லா நலத்திட்டங்கள்

அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா நலத்திட்டங்களான புத்தகம், பாடக் குறிப்பேடு, சீருடை, காலணி, கணித உபகரணப் பெட்டி, கிரையான்ஸ், வண்ண பென்சில்கள், அட்லஸ், ஸ்கூல் பேக் ஆகிய அனைத்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்ற விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் வட்டார வள மைய ஆசிரியர், பயிற்றுநர்களின் உதவியுடன் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள்

மாணவர்களுக்கு வசதியான, காற்றோட்டமான கட்டிடங்கள், மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, தகுதி படைத்த நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இருப்பதை பெற்றோருக்கு எடுத்துக்கூற வேண்டும்.குழந்தை தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட தேவையான நடவடிக்கைகள் உடனடியான எடுக்கப்பட வேண்டும்.

ஆங்கிலவழிக் கல்வி

அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அந்த வகுப்புகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான ஆங்கிலவழிக் கல்வி வழங்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் மற்றம் மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி செய்தால் அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயரும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
Campaign to increase student strength in govt. schools, Meanwhile, the teachers of several government schools have intensified student enrol

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia