அண்ணா பல்கலைக் கழகத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் விலகலால் மாணவர் சேர்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வானது சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்று வந்தது. ஆனால், இந்த நடைமுறையானது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சிரமம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் இதனை எளிதாக்கும் வகையில் கடந்த கல்வியாண்டு முதல் இணையதளம் வழியில் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த புதிய நடைமுறையின் கீழ் தமிழகம் முழுவதும் 42 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களிலேயே சேர்க்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்காக, 2017-ஆம் ஆண்டில் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டதில், இக்குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் நியமிக்கப்பட்டார்.
துணைவேந்தருடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காகத் தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையரை இக்குழுவின் இணைத் தலைவராக அரசு நியமித்தது. சென்னையில் மட்டுமே நடந்த சேர்க்கை கலந்தாய்வு, தமிழகத்தில் 42 மையங்களில் செயல்படுத்தப்பட்ட நிலையில், அப்பணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கருதி தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, 2018-இல் இணைத் தலைவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அண்ணா பல்கலை துணைவேந்தர், தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அவர் வகித்த தலைவர் பதவி மாற்றி அமைக்கப்படவும் இல்லை. அவர் விலகியதால், வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை எந்த வகையிலும் பாதிப்பு அடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications












